பக்கம்:கபாடபுரம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

கபாடபுரம்


சொற்களின் மூலம் மனிதர்களை அறிந்துகொள்ள முயல்கிறவர்களைவிட உணர்ச்சிகளின் மூலமே மனிதர்களை அநுமானம் செய்கிறவர்களிடம் மிக மிக விழிப்பாக இருக்க வேண்டும்."

"உண்மைதான் இளையபாண்டியரே! சிந்தனையின் மூலமாகவும், சொற்களின் மூலமாகவும், மனிதர்களை அறிந்து கொள்கிறவர்களைவிட உணர்ச்சி பாவங்களின் மூலம் உய்த்துணர முயல்கிறவர்கள் குழப்பங்களையும் பயங்கர விளைவுகளையும் உண்டாக்கிவிட வல்லவர்கள். எதற்கும் நாம் கவனமாகத்தான் இருக்க வேண்டும்."

"இவ்வளவில் அவர்களுடைய உரையாடல் நின்றது. கப்பல் ஊழியர்களைக் கூவி அழைத்து மேலே பயணத்தைத் தொடரவேண்டிக் கட்டளைகளை இட்டனர். சிறிது நேரத்தில் பயணம் தொடர்ந்தது. மேலே செல்லச் செல்ல அலைகள் சுழன்று சுழன்று புரட்டிக்கொண்டு வந்தன. அப்பகுதியில் இரண்டு மூன்று சிறுசிறு தீவுகளால் கடல் துணிக்கவும், பிரிக்கவும் பட்டிருந்ததனால் காற்றும், அலைகளும் அவர்களுடைய கப்பலை ஆட்டிவைக்கத் தொடங்கின. அந்த நேரத்தில் அவ்வளவு பயங்கரமான அலைகளுக்கும் காற்றுக்கும், இடையே பயணம் செய்வதைவிட அருகிலுள்ள தீவு ஏதாவது ஒன்றில் தங்கிவிட்டு மறுநாள் காலையின் பயணத்தைத் தொடர்வதுதான் பொருத்தமாக இருக்கும்போலத் தோன்றியது. இரவுநேரத்தில் இதுபோல் தீவுகளால் பிரிக்கப்பட்ட கடல் வழிகளில் காற்றுடன் அலையும் கொந்தளிப்பும் மிகுதியாயிருப்பதும் பகலில் சிறிது அமைதியடைவதும் வழக்கமென்று கப்பல் உழியர்களும் கூறவே தங்கிச் செல்வது என்ற முடிவை இளையபாண்டியன் உறுதிப்படுத்திக் கொண்டான்.

அதே நேரத்தில் முன்பின் தெரியாத ஒரு புதிய தீவில் இரவுநேரத்தில் போய்க் கரையிறங்குவதால் எற்படக்கூடிய விளைவுகளைப்பற்றியும் அவன் சிந்திக்கத் தவறவில்லை. இத்தகைய தீவுகளில் மனித இயல்பின் மேன்மையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/148&oldid=490076" இலிருந்து மீள்விக்கப்பட்டது