பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

நெஞ்சக்கனல்


விட்டுப் போய்விட்டார். கமலக்கண்ணன் தனியே கட்சியின் வரவிருக்கும் ஊழியர் கூட்டத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். அந்த விநாடியிலிருந்து— ஊழியர் கூட்டம் நடைபெறும் தினமாகிய ஞாயிற்றுக்கிழமை வருகிற வரை ஒவ்வொரு விநாடியும் இதே சிந்தனையிலும் கவலையிலுமாகவே மூழ்கியிருந்தார்அவர். இந்த ஊழியர் கூட்டத்தைக் கூட்டுவதில் தமக்குள்ள அதிருப்தியைக் காட்டுவதன் அடையாளமாகக் கூட்டம் நடைபெறப் போகிற அறிக்கையைத் தமது ‘தினக்குரலி’ல் வெளியிடாமலே இருந்துவிட்டார்.

“அறிக்கையைத் ‘தினக்குரலி’ல் எதிர்பார்த்தோம். ஏன் வெளியிடவில்லை?’’—என்று கேட்டுக் கடிதங்கள் வந்தன. அவற்றையும் கிழித்துக்குப்பைக் கூடையிலே போடச் செய்தார். அதோ, இதோ, என்று ஊழியர்களின் கூட்டம் நடைபெறும் தேதியாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. கூட்டம் காலை பத்து மணிக்கு என்று குறிக்கப்பட்டிருந்தது. ஒன்பது மணி சுமாருக்குக் கட்சித் தலைவரிடமிருந்து கமலக்கண்ணனுக்கு ஒரு அந்தரங்கமான டெலிபோன் செய்தி வந்தது.

“இன்றைக்கு ஊழியர்கள் கூட்டத்திற்கு நீங்கள் வர வேண்டாம். இங்கு நிலைமை ஒருவிதமாக இருக்கிறது. நானே பார்த்துச் சமாளித்துக் கொள்கிறேன்”—என்றார் கட்சித் தலைவர். கமலக்கண்ணன் இதை அவ்வளவாக இரசிக்கவில்லை. கூட்டத்திற்குத் தானும் போகவேண்டுமென்றே விரும்பினார். பழைய பயம் அவர் மனத்தில் அன்று இல்லை.

“அதெல்லாம் நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். தனியாக நீங்கள் மட்டுமே இருந்து கேள்விகளுக்குப் பதில் சொல்லிச் சிரமப்படுவதைவிட நானும் சேர்ந்து இருப்பது நல்லது. பயல்களுக்கு ஒரு அத்து இருக்கும். சரியாகப் பத்து மணிக்கு—ஐந்து நிமிடம் இருக்கும்போது நான் வந்து விடுகிறேன்”–என்று தானும் வரப்போவதாகவே கூறினார் கமலக்கண்ணன். “சரி! நான் சொல்வதைச் சொல்லி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/98&oldid=1048354" இலிருந்து மீள்விக்கப்பட்டது