பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

நெஞ்சக்கனல்


கண்ணன் திரும்பவில்லை. பின்பு சற்றுப் பலமாகவே இருமினார். கமலக்கண்ணன் மெல்ல நிமிர்ந்து திரும்பிப் பார்த்தார். எதிரே நின்ற புலவரை உட்காரச் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை அவருக்கு. சுபாவமாகவே ஒருமுறை—இருமுறை பணிந்து விட்டுக் கொடுக்கிறவனிடம்— எப்போதுமே அப்படி விட்டுக்கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது பணக்காரர்களுக்கு வழக்கமாகி விடும். விட்டுக்கொடுக்காமல் எப்போதுப் பிடிவாதமாக நிமிர்ந்து நிற்கிற தீரனைத்தான் ஒரு சீராக மதிக்க வேண்டுமென்று அவர்கள் பயப்படுவார்கள். ஒருமுறை இருமுறை விட்டுக் கொடுக்கிறவனிடம் அவர்களுக்கே குளிர் போய்விடும். புலவர் அப்படிப் பலமுறை விட்டுக்கொடுத்தே பழகியிருந்ததனால்—அவரை மரியாதையாக உட்காரச் சொல்லாவிட்டாலும் தவறில்லை என்றே கமலக்கண்ணன் எண்ணினார்.

“ஐயா...வந்து...வந்து...” என்று புலவர் நின்றபடியே எதையோ பேசத் தொடங்கினார்

“வந்தாவது...போயாவது? இப்ப என்ன காரியமா வந்தீங்க...”

“ஒன்றுமில்லை ஐயா! தங்கள் தந்தையார் நினைவு நாள் இத்திங்கள் பதினாறாம் நாள் வெள்ளிக்கிழமையன்று வருகிறது. யான் செயலாளனாக இருந்து கட்மையாற்றும் செங்குட்டுவன் படிப்பகத்தின் சார்பில் அறப்பெருந்தகையும், வள்ளலுமான தங்கள் தந்தையார் நினைவு நாளைச் சீரிய முறையிலே கொண்டாட எண்ணியுள்ளோம்.”

“சரி, அதான் வருமே வழக்கமா...”—என்று அசுவாரஸ்யமாக இழுத்தார் கமலக்கண்ணன்.

வழக்கமாக இப்படி ஒரு கோரிக்கையைப் புலவர் விடுத்தால் உடனே ஒரு புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டை உறையிலிட்டுக்காதும் காதும் வைத்தாற்போல் கொடுப்பது கமலக்கண்ணன் இயல்பு. இன்று அந்த இயல்புக்குமாறான கடுமையோடு அவர் இருக்கவே புலவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மறுபடி எப்படித் தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/96&oldid=1048351" இலிருந்து மீள்விக்கப்பட்டது