பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

நெஞ்சக்கனல்


மறுநாள் அவரை எப்படியோ சம்மதிக்கச் செய்து மாயாதேவியின் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள் பிரகாசமும் கலைச்செழியனும், மாயாதேவிக்கு ஒரு வைர நெக்லஸ் பரிசளித்தார் கமலக்கண்ணன். கமலக்கண்ணனிடம் சிரித்துச் சிரித்துப் பேசினாள் மாயா; அவளுடைய சிரிப்பின் ஒய்யாரத்திலும், பழகிய தளுக்கிலும் கமலக்கண்ணன் சொக்கிப்போனார். இருவரும் அருகருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது– கமலக்கண்ணன் எவ்வளவு மறுத்துச் சொல்லியும் கேட்காமல் கலைச்செழியன் ஒரு படம் பிடித்துக்கொண்டான்.

“உங்களைப்போலக் கலைகளை ஆதரிக்கிற ரசிகர் என் வீடுதேடி வந்தது நான் செய்த பாக்கியம்” என்றாள் மாயா. அந்தப் பேச்சிலிருந்த மழலைத்தன்மை போன்ற ஒரு போதை கமலக்கண்ணனைக் கிறங்கச் செய்தது.

“உங்களைப்பத்திப் பேசாத ரசிகனே இன்னிக்கித் தமிழ்நாட்டிலே கிடையாது. நான் என்ன? சாதாரண வியாபாரி...” என்று கீழே இறங்கினாற்போல் பணிந்து பேசினார் அவர்.

“எனக்கென்னமோ உங்களை ரொம்பப்பிடிச்சிருக்கு” என்று முகம் மலர்ந்தாள் மாயா.

அதுதான் சமயமென்று தினசரியின் வெளியீட்டு விழாவில் முதல் நாள் பேப்பர் முதல் பிரதியை விலைக்கு வாங்க ‘மாயா’ தான் வரவேண்டுமென்று கமலக்கண்ணன் ஆசைப்படுவதாகக் கலைச்செழியன் பேச்சைத் தொடங்கி வைத்தான்.

“நான் எதுக்குங்க...சினிமாப் பத்திரிகையா இருந்தாலும் பொருத்தமா இருக்கும். இதுவோ...டெய்லி நியூஸ் பேப்பர்...இதுக்குப் போயி என்னை விழாவுக்குக் கூப்பிடறீங்களே...’ என்று மாயாவும் மறுப்பதுபோல் விநயமாகக் குழைந்தாள்.

“அதென்னம்மா அப்படிச் சொல்லிட்டே? சினிமாப் பத்திரிகையின்னாத்தான் நீவரணுமா? எதுன்னாலும் இன்னிக்கி அதிலே சினிமா உண்டு, சினிமா இல்லாம எதுவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/88&oldid=1047802" இலிருந்து மீள்விக்கப்பட்டது