பக்கம்:கபாடபுரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

83

அறிவதற்கே அரச குடும்பத்து மதிநுட்பமும் பயன்பட்டால் அப்புறம் அந்த மதிநுட்பத்திற்கு ஒரு பயனுமில்லை. தோற்றம், அதன் பின்னுள்ள கருத்து, கருத்தின்பின் மறைந்திருப்பதாகத் தோன்றும் உட்கருத்து இறுதியாக அவை பற்றிய நம் அதுமானங்கள் - என்று எல்லாவற்றையும் தொகுத்துணரும் ஞானம் நமக்கு வேண்டும். உண்மையிலேயே உங்களுடைய தொகுத்துணரும் அறிவை நான் சோதனை செய்வதற்கு ஆசைப்படுகிறேன். இப்போது பரிசோதனைக்காக நான் சொல்லப்போகும் காரியத்தை நீங்கள் எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள், எவ்வாறு அநுமானங்களைத் தொகுக்கப் போகிறீர்கள் என்பவற்றை எல்லாம் பார்த்த பின்பே உங்களுடைய அரசதந்திரத் திறமைப்பற்றி நான் கூறமுடியும்.

"முரசமேடைப் பற்றியோ, அதிலுள்ள இரகசியங்களைப் பற்றியோ முதல்முதலாக இன்றுதான் நான் கேள்விப்படுகிறேன் என்று நீங்கள் நினைப்பதாயிருந்தால் உங்கள் பேதைமையைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அந்த முரசமேடையில், தொடங்கும் சுருங்கை வழி எங்கே போகிறது எங்கே முடிகிறதென்று நீங்கள் அறிந்துகொண்டால் என்னைவிட ஒரு வேளை உங்களுக்கு அதிக வியப்பு ஏற்படலாம்.

"நான் வியக்கவில்லை என்பது பொருளல்ல. என்னுடைய வியப்புக்கும் காரணமிருக்கும். வியப்பின்மைக்கும் காரணமிருக்கும். அதைப் பின்னால் சொல்லுகிறேன். இன்றிரவே அவுணர்விதி முரசமேடை பற்றி நீங்களே உங்கள் சொந்த அறிவுத்திறன் கொண்டும், சாம, தான, பேத, தண்ட, முயற்சிகள் கொண்டும் என்னென்ன தெரிந்துவரமுடியுமோ, அவற்றைத் தெரிந்துவர உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறேன். இந்த முயற்சியில் உயிர்ப் பயம், பகை, குரோதம் எல்லாமே உண்டு. கரணம் தப்பினால் மரணம்தான்! ஆயினும் அரச தந்திரமுள்ளவனுக்குத் தூசு மாத்திரமே ஆகும் இது."

"நாங்களிருவரும் இந்தக் கட்டளையைச் சிரமேற் கொண்டு இன்றிரவே முயல்கிறோம். பெரியபாண்டியர் இந்தக் காரியத்தில் எங்களை ஈடுபடுத்துவதற்கு முழுமையாக நம்பலாம்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/85&oldid=490008" இலிருந்து மீள்விக்கப்பட்டது