பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

93


ஊழியர் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறீர்? என்ன சமாசாரம். ஏதாவது கலவரம் பண்ணப்போறாங்கன்னா முன்கூட்டியே சொல்லிப்பிடும். நான் கூட்டத்துக்கு வரலை, நான் இருக்கிறது உங்க கட்சிக்குப் பலமே ஒழிய எனக்கு உங்க கட்சியாலே பலம் இல்லே! ஞாபகமிருக் கட்டும்.’’ என்றார் கமலக்கண்ணன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க! நீங்க சும்மா ராஜா வாட்டம் வந்து கூட்டத்திலே உட்காருங்க. நான் பார்த்துக்கறேன். இந்தக் கூட்டமே ஒரு கண் துடைப்புக்காகத்தான் ஏற்பாடு பண்ணியிருக்கேன். நம்ம பசங்க வந்து தொந்தரவு செய்யிறாங்க ஊழியர் கூட்டம் போட்டு நாளாயிடிச்சாம். கட்சியிலே ஊழியர்களுக்கே நம்பிக்கைக் குறைஞ்சுக்கிட்டு வருது–அப்பிடி–இப்படிங்றாங்க...வெறும் வாயை மெல்றவங்களுக்கு அவல் கிடைச்சாப்ல. நாம் கூட்டத்தைக் கூட்ட மாட்டேன்னு மறுத்தா நிலைமை இன்னும் மோசமாயிடும். அதுனாலேதான் கூட்டத்துக்குச் சம்மதிச்சாப்பிலே ஒரு சுற்றறிக்கையை விட்டேன்” என்று கமலக்கண்ணனுக்கு ஃபோனில் மறுமொழி கூறினார் கட்சித் தலைவர்.

“எப்படியோ பார்த்துச் சமாளிக்கத் தெரிந்து கொள்ளும். என் பத்திரிகையைக் கட்சிக்காகவே கொடுத்திருக்கேன். என் செலவிலே ஊரூராய்க் கட்சிப் பிரச்சாரமும் நடக்குது. என்னை எவனாவது ஊழியர் கூட்டத்திலே குறைசொல்லிப் பேசினா நான் தாங்கமாட்டேன்” என்று மீண்டும் வற்புறுத்திக் கூறிய பின்பே கமலக்கண்ணன் ஃபோனை வைத்தார்.

பேசி முடித்து ஃபோனை வைத்துவிட்டாலும் அவர். மனம் என்னவோ. கவலை நிறைந்தே இருந்தது. அந்தவேளையில் பார்த்துச் சமய சந்தர்ப்பம் தெரியாமல் புலவர் வெண்ணெய்க்கண்ணனார் அவரைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தார். கமலக்கண்ணனோ அப்போதிருந்த மனநிலையில் அவர் வந்ததையே கவனிக்காதது போல் இருந்துவிட்டார்.

புலவர் என்ன செய்வதென்று தெரியாமல் தயங்கிய படியே நின்றார். தாம் வந்திருப்பதை அறிவுறுத்துவதற்கு அடையாளமாக இலேசாய்ச் செருமினார். அதற்கும் கமலக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/95&oldid=1048349" இலிருந்து மீள்விக்கப்பட்டது