பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

81


“உங்களைப் போல கலை ரசிகர்களிட்ட ரொம்ப தொடர்பு வச்சிக்கணும்னு மாயாவுக்கு ஆசை உண்டுங்க...” என்று வேறு விதமாகச் சொல்ல முடியாத விஷயத்தை ரசிகத் தன்மை என்ற தோரணையில் அழகாக விவரித்தார் அட்வர்டைஸிங் அண்ட் வேல்ஸ் ப்ரமோஷன்ஸ் பிரகாசம். அது அவருக்கும் புரியும். கமலக்கண்ணனுக்கும் புரியும் அப்புறம் என்ன?

“நீங்க தொடங்கப் போற புது டெய்லிக்கு– ‘விளம்பர பட்ஜெட்’ எவ்வளவு போட்டிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா...சார்!”

“இன்னும் ‘பட்ஜெட்’ எதுவும் போடலே நீங்களே ஒரு ‘ஸ்கீம்’ கொடுங்களேன். முதல்லே பத்திரிகைக்குப் பேர் செலக்ட் பண்ணனும். அப்புறம் வால்போஸ்டர், மற்ற நியூஸ் பேப்பரிலே விளம்பரம், தியேட்டர்களிலே சிலைடு, எல்லாமே கொடுத்துடலாம்னு நினைச்சிருக்கேன்...”

“ஓ! பேஷா செய்யலாங்க...”

“தினமுழக்கம்’னு வைச்சிடுங்களேன்...” -- என்றான் கலைச்செழியன்.

“சே! சே! அது நல்லாயில்லே...ரொம்ப ‘சீப்பா’ இருக்கு! ‘தினக்குரல்’னு வைக்கலாம்..” என்று திருத்தினார் பிரகாசம்.

“பேப்பர்லே போட்ட விளம்பரத்தைப் பார்த்து நெறையப் பேர் எழுதியனுப்பிச்சிருக்காங்க. அதையும் பார்த்துத்தான் முடிவு பண்ணுவமே...?” என்றார் கமலக்கண்ணன்.

சிறிது நேரத்திற்குப் பின் பத்திரிகையைப் பற்றிய பேச்சைவிட்டு மறுபடியும் மாயாதேவியைப் பற்றிய பேச்சுக்குக் கமலக்கண்ணனே வந்தார்.

“இப்ப எல்லாருமே அந்தப் பெண்ணைத்தான் ஹீரோயினாப் போடறாங்க இல்லே...? வந்த கொஞ்ச நாளிலேயே ஃபீல்டைப் பிடிச்சுக்கிட்டா. கெட்டிக்காரியாகத்தான் இருக்கணும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/83&oldid=1047794" இலிருந்து மீள்விக்கப்பட்டது