பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

187


–இரவுச் சாப்பாட்டுக்குப் பின் மனைவி குழந்தைகளோடு திரைப்படம் பார்க்கப் போனார் அவர். திடீரென்று குடும்ப வாழ்க்கையையும், குடும்ப வாழ்வின் சுகங்களையும் அக்கறையோடு அநுபவிக்க வேண்டும் போலத் தோன்றியது அவருக்கு. பொது வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றம் இதற்குக் காரணமா அல்லது தனிவாழ்வில் தன்னை, மறைத்துக் கொள்ள விரும்பும் விருப்பம் காரணமா என்று கண்டுபிடிக்க முடியாமலிருந்தது.

சினிமாவிலிருந்து வீடு திரும்பும்போது ஒரு மணி. குழந்தைகள் தங்கள் அறைக்குப் படுத்துக் கொள்ளப் போனார்கள். அவர் நிறையக் குடித்தார். அதிகம் குடிக்காமல் தடுக்க மனைவி எவ்வளவோ முயன்றும் பயன்படவில்லை. கவலையை மறக்க மதுவில் மூழ்க வேண்டியிருந்தது அவருக்கு.

மறுநாள் காலையில் அவர் எழுந்திருக்கும் போது எட்டு மணிக்கு மேலாகி விட்டது. எழுந்திருந்ததும் எழுந்திராததுமாகத் தலைப்பக்கம் டீப்பாயில் தயாராகக் கொண்டு வந்து மடித்து வைக்கப்பட்டிருந்த காலைத் தினசரிகளை எடுத்து ஆவலோடு புரட்டத் தொடங்கினார். அவருடைய இராஜிநாமாச் செய்தி–அதை முதலமைச்சர் ஒப்புக் கொண்டு விட்டதாக அறிவித்திருந்த அறிவிப்பு எல்லாம் எல்லாப் பத்திரிகைகளிலும் வந்திருந்தன. தமிழ்த் தினசரிகளில் முதல் பக்கத்திலும், ஆங்கிலத் தினசரிகளில் மூன்றாம் பக்கத்திலுமாக இந்தச் செய்தி பெரிதாக வெளியாகியிருந்தது...‘நோ நியூஸ் ஃப்ரம் மை எண்ட்’என்பது முதல் ஆஸ்க் யுவர் சீஃப் மினிஸ்டர். ஹி வில் டெல் யூ நியூஸ் என்பதுவரை தான் நிருபர்களிடம் உரையாடிய வார்த்தைகள் அனைத்துமே பத்திரிகைச் செய்தியில் ஒன்று விடாமல் இருப்பதைக் கமலக்கண்ணன் படித்தார். காபியோடு உள்ளே நுழைந்த சமையற்காரன், “சார்! வாசல்லே உண்ணாவிரதப் பந்தலையும் காணலை, ஆளையும் காணோம்” என்றான். தன்னுடைய இராஜிநாமா அந்த விளைவை உண்டாக்கியிருக்க வேண்டுமென்று கமலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/189&oldid=1049515" இலிருந்து மீள்விக்கப்பட்டது