பக்கம்:கபாடபுரம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

95


ஐயப்பாட்டைத் தெரிவித்தான் இளையபாண்டியன். இது நியாயமான சந்தேகமென்றே முடிநாகனுக்கும் தோன்றியது.

விளக்காகவோ, சுரங்கத்தின் மேற்புறத்தில் எங்கிருத்தாவது வருகிற ஒளியாகவோ அது இருந்திருக்க முடியாது என்று அவர்களுக்குள் ஓர் உறுதி ஏற்பட்டபின், முன்பு நம்பிக்கை ஒளியாகத் தோன்றியிருந்த அதே ஒளியைப் பற்றி இப்போது சிந்தனையும் சந்தேகமும், கற்பனைகளும், எழுந்தன. இப்படி அந்த ஒளியைப் பற்றிய சந்தேகத்தோடும் சிந்தனைக் கலவரங்களுடனும் கீழே இறங்கிச் சென்றதும், மறுபடி திரும்பிச் செல்லுகிற வழியில் ஒரு குறிப்பிட்ட தொலைவுவரை போய் நின்றுகொண்டு திரும்பிப் பார்த்தார்கள் அவர்கள் மீண்டும் அந்த ஒளி சுடரிட்டது. இருவரும் உடனே விரைந்து திரும்பி அந்த ஒளிவந்த இலக்கைக் குறிவைத்து நடந்தார்கள். முரசமேடையிலிருந்து தேர்க்கோட்டத்துக்குப் போய் மேலேறுகிற வழியில் ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து குறிப்பிட்ட எல்லைவரைதான் அந்த ஒளி தெரிந்தது. அதற்குப்பின் அந்த ஒளியைப்பற்றி நினைக்கவே வழியின்றி மேலேறிச்செல்லும் படிகளைக் கால்கள் நன்றாக உணரமுடிந்தது.

'சுரங்க வழி முடிந்து மேலே ஏறிச் செல்லும் வழி இந்தப் பகுதியில்தான் இருக்கிறது - என்பதை உள்ளே நடந்து வருகிறவர்கள் இருளிலும் தடுமாறாமல் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே இந்த ஏற்பாடு என்பதை நன்றாக உய்த்துணர முடிந்தது. முடிநாகனும் இளைய பாண்டியனும் அந்த ஒளிக்கீற்று எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக விரைந்தபோது அவர்களுக்கு ஏற்பட்ட அநுபவம் விந்தையானதாக இருந்தது. அதை அறிந்து கொள்ளும் ஆவல் குறைவதாய் இல்லை. 'இதோ அருகில் நெருங்கிவிட்டோம். இன்னும் நொடிப் பொழுதில் இந்த ஒளியைப் பற்றிய உண்மை நமக்கு விளங்கிவிடும்' - என்று நினைத்த கணத்திற்கு அடுத்த கணமே அந்த ஒளி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தோ திசை தப்பியோ போய்க் கொண்டிருந்தது. நீண்ட நேரத் தடுமாற்றத்திற்குப்பின் மிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/97&oldid=490021" இலிருந்து மீள்விக்கப்பட்டது