பக்கம்:கபாடபுரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

63


கால்கடுக்க நகர் சுற்றுவதா என்று தயங்கக் கூடாது. குறும்பர்களும், அவுணர்களுமாகத் திரியும் கடற்கொலைஞர்கள் ஒருவகையில் நமக்குப் பாதுகாப்பு. வேறொரு வகையில் அந்தரங்கமாக நமக்குப் பகை.

"மார்பின் மேல் விழுந்துவிட்ட பாம்பை வாளால் வெட்ட முடியாது. வெட்டினால் நம் மார்பிலும் வெட்டுப்படும். இந்தக் கடற்கொலைஞர்களின் பகையும் ஒருவிதத்தில் அப்படிப் பட்டது. இவர்களை ஒடுக்கும்போது மிகவும் கவனமாகச் செயல்படவேண்டும். அவர்கள் நம்மை அழிக்க விட்டுவிடவும் கூடாது. அவர்களை அழிப்பதாக எண்ணி நாமே நம்மை அழித்துக்கொண்டுவிடவும் கூடாது. நேற்று நீ முடிநாகனோடு நகர் பரிசோதனைக்குச் சென்றதை நான் மனமாரப் பாராட்டுகிறேன் குழந்தாய்! மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. போகப் போக நீயாகவே எல்லாம் தெரிந்துகொள்ள நேரிடும். உனக்கே எல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலும் வரும்" என்றார் பெரிய பாண்டியர்.

பாட்டனாரிடம் விடைபெற்றுச் சென்று அன்று பகலில் தாய் திலோத்தமையாருடன் நெடுநேரம் உரையாடிக் கொண்டிருந்தான் சாரகுமாரன். இசைத்துறையிற் பெருவல்லமை படைத்த அவன் தாய் அன்பாகவும் கனிவுடனும் அவனுடைய இசைத்திறமையைப் பரிசோதித்தாள். குருகுல வாசத்துச் செய்திகளைப் பற்றியும் அவனுடைய தாய் அவனிடம் ஆவலோடு ஒவ்வொன்றாகக் கேட்டாள். பிற்பகலில் முடிநாகனுடன் தேர்க்கோட்டத்திற்குப் போயிருந்தான் இளையபாண்டியன். தேர்க்கோட்டத்திலிருந்து முன்னிரவில் அரண்மனைக்குத் திரும்பியபின்னர் முதல்நாள் போலவே, 'நள்ளிரவில் இன்றும் நகர் பரிசோதனைக்குப் போகலாம்' என்ற இளையபாண்டியனின் விருப்பத்திற்கு முடிநாகனும் இணங்கினான்.

தொடர்ந்து ஒரே விதாகப் போவதும், வருவதும் சந்தேகத்துக்கு இடம் தரும் என்பதினால் அன்றிரவு குதிரைகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/65&oldid=489983" இலிருந்து மீள்விக்கப்பட்டது