பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

107

யில் பொருள்களுடனேயே தங்களை நாடிவருகிறவர்களை வியக்கிறார்கள்’’–என்று கூறப்பட்டவுடன்.

“கிணறு சின்னத்தை அப்படியெல்லாம் வாரி வழங்க, முடியாது. ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கிணறே வெட்டிக் கொடுக்கலாமென்றாலும் அது தேர்தலுக்குள் நடக்கக்கூடிய காரியமில்லை. எனவே எனாமலில் சட்டையில் குத்திக்கொள்ள ஏற்றபடி கிணறு சின்ன ‘பாட்ஜ்’ ஒன்று செய்து யாவருக்கும் வழங்கலாம்”–எனப் பதிலுக்கு இவர்கள் தரப்பிலும் யோசனை தெரிவிக்கப்பட்டது. உடனே கமலக்கண்ணனிடம் செய்தி தெரிவிக்கப்பட்டு, அவருடைய சம்மதத்துடன் எனாமல் பாட்ஜுகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. சினிமா கம்பெனி ஒன்றில்கூறி கிணறு மாதிரி லாரியின் மேல் ஒரு ஸெட்டிங்ஸ் பிளைவுட்டில் தயாரித்து ஊர்வலம் விடவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டன. கமலக்கண்ணனை எதிர்த்து அவர் சேர்ந்திருந்த அதே தேசியக் கட்சி ஊழியர்கள் சிலரும் மேடையேறி முழங்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களை எதிர்த்தும் சமாளிக்க வேண்டியிருந்தது.

“தேச விடுதலைக்காக ஒரு துரும்பைக்கூட இவர் அசைத்ததில்லை! வெள்ளைக்காரன் இருந்தவரை இவர் குடும்பம் தாசானு தாசனாக இருந்தது. அன்று சத்தியாக்கிரகிகளைக் கேலி செய்த இவர் குடும்பம் இன்று பதவிக்காகப் பறக்கிறது. கிணறுச் சின்னத்தில் நிற்கிற இவரை நம்பினால் பொதுமக்கள் பாழுங்கிணற்றில் விழவேண்டியதுதான்”—என்று முழங்கினார்கள் கமலக்கண்ணனின் எதிரிகள். பதிலுக்குக் கமலக்கண்ணனின் பிரசார இயந்திரம் சரியாக இயங்கி உடனே மறுமொழி கூறியது.

காந்திய சமதர்மசேவா சங்கத்தின் கட்டிடங்களை உருவாக்கிய வள்ளல் கமலக்கண்ணனைக் குறைகூறுகிறவர்களின் நாக்கு அழுகிப் போகும். தம் வீட்டு முகப்பில் பெரிதாக மாட்டியிருக்கிற் காந்தியடிகள் படத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்ளாமல் சாப்பிடப் போகமாட்டார் நம் வள்ளல். ஆலயங்களுக்குச் செய்த அறப்பணிகளோ அளவற்றவை. கலைத்துறையிலோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/109&oldid=1048376" இலிருந்து மீள்விக்கப்பட்டது