பக்கம்:கபாடபுரம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

107


"போதும் அதோ பூக்கொய்யச் சென்ற என் தோழிகள் வந்துகொண்டிருக்கிறார்கள். இதோ உங்கள் பின்புறம் மரத்திற்கு அப்பால் பதுங்கி நிற்கிற உங்கள் நண்பரும் அதிசயத்தைப் பார்ப்பதுபோல் எட்டி எட்டிப் பார்க்கிறார். முடியுமானால் அருகிலிருக்கும் எங்கள் கூடாரத்திற்கு வரவேண்டுகிறேன். என் பெற்றோர் வழிப்பயணத்தில் என்னைக் காப்பாற்றிக் கபாடபுரம் வரை தேரில் கொண்டுவந்து சேர்த்ததற்காக உங்களுக்கு நன்றிகற ஆர்வத்தோடிருக்கிறார்கள். அரண்மனைக்குத் தேடிவந்து அவர்கள் அதைக் கூற இயலாது. நாங்கள் ஏழைகள், அரண்மனைக்கு வருகிற தகுதியோ, பெருமிதமோ இல்லாதவர்கள். தயை செய்து எங்கள் குடிசையில் உங்கள் பொன்னடிகள் ஒரு முறை நடக்கும்படி செய்தால் பாக்கியமுள்ளவர்களாவோம்..."

"எளிமையில்தான் அருமை இருக்கிறது. அந்த அருமையை விட வேறு பெருமிதம் எளிமைக்கு எதற்கு? நீங்கள் இன்னும் சிறிதுகாலம் கபாடபுரத்தில் தங்கியிருப்பீர்கள் அல்லவா? இன்னொருநாள் நானே உங்கள் கூடாரத்திற்கு வருகிறேன் பெண்னே! இன்று எனக்கு விடைகொடு என்னால் இயலுமானால் உன்னுடைய குரலுக்காகவே தனியாய்ப் புதிதாய் ஒரு பெரிய இசையிலக்கணமே படைக்கும் படி செய்வேன். அப்படி ஒரு காலம் வந்தாலும் வரலாம்."

"ஏதோ நாங்கள் எங்களுடைய எளிய கலையைப் பெரிய பற்றுடன் ஆண்டுவருகிறோம். உங்களுடைய ஒயாப் புகழ்ச்சியைக் கேட்டால் எனக்குப் பயமாயிருக்கிறது. கலைஞர்களுக்குப் போதாத காலம் சில வேளைகளில் அவர்களை வந்தடைகிற புகழோடு சேர்ந்து வருமென்பார் எங்கள் தந்தை."

"நீ கூறுவதை எல்லாம் கேட்டால் உங்கள் தந்தையை உடனே பார்க்கவும் பேசவும் வேண்டும்போல் ஆசையாயிருக்கிறது எனக்கு. ஆனால் அதுவும் இப்போது இயலாமலிருக்கிறது. அரசியல் கடமையாக வந்தவனுக்கு வேண்டிய போது நிம்மதியும், தனிமையும் எங்கே கிடைக்கிறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/109&oldid=490033" இலிருந்து மீள்விக்கப்பட்டது