பக்கம்:கபாடபுரம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

கபாடபுரம்


ஒவ்வொருவருடைய கண்களும்கூட அந்த வேல் நுனியைப்போல் பளிரென்று ஒளிர்ந்துகொண்டிருந்தன. இளைய பாண்டியனும், முடிநாகனும் ஏழுகோல் தொலைவிலேயே நிற்குமாறு செய்துவிட்டு உடன் வந்த குள்ளர்கள் - வலிய எயினனைப் பயபக்தியோடு அணுகி வணங்கி - ஏதோ கூறினர்.

அந்த நேரம் பார்த்துச் சமயோசிதமாகக் கபாடத்து முத்துக்களையும், சில இரத்தினங்களையும் இரு உள்ளங் கைகளிலும் ஏந்தியபடியே வலிய எயினனை நெருங்கினான் முடிநாகன். இரவில் விண்மீன்களாக மின்னும் அந்த முத்துக்களையும் இரத்தினங்களையும் கண்டவுடன் வலிய எயினனின் குரூரமான முகத்தில்கூட ஒரு மலர்ச்சி பிறந்தது. இளைய பாண்டியன் ஏனோ வலிய எயினனின் அருகில் நெருங்கிச் செல்வதற்குத் தோன்றாமல் முதலில் நிறுத்தப்பட்ட இடத்திலேயே தயங்கி நின்றான்.

முடிநாகனோ தானாக எடுத்துக்கொண்ட உரிமையுடன் வலிய எயினனுக்கு அருகில் நெருங்கி முத்துக்களை வழங்கியதோடு அமையாமல், "தலைவரே! நாங்கள் பாண்டிய நாட்டு யாத்ரிகர்கள். தென்பழந்தீவுகளின் இயற்கை வளங்களைச் சுற்றிப்பார்க்க வந்திருக்கிறோம். தங்களுக்கு அன்பளிப்பாக இந்த முத்துக்களையும், இரத்தினங்களையும் கொண்டு வந்தோம்" என்று மிக விநயமாகப் பேசவும் தொடங்கிவிட்டான். வலிய எயினன் முகமலர்சியோடு அவற்றைப் பெற்றுக்கொண்டான்.

"ஏன் உங்களுடன் வந்தவர் அங்கேயே தயங்கி நிற்கிறார் அவரையும் கூப்பிடுங்கள். இருவரும் அப்படி அமர்ந்து கொள்ள வேண்டுகிறேன்" என்று பக்கத்தில் மென்மையாக அலங்கரிக்கப்பட்டிருந்த இன்னோர் வெட்டுண்ட அடிமரப் பகுதியைக் காண்பித்தான் வலிய எயினன். இளையபாண்டியனும் முடிநாகனுக்கு அருகில் வந்துசேர வேண்டியதாயிற்று. இருவரும் வலிய எயினனுடைய வேண்டுகோளுக்கிணங்கி அமர்ந்துகொண்டனர். வலிய எயினன் அந்தத் தீவில் விளைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/126&oldid=490052" இலிருந்து மீள்விக்கப்பட்டது