பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

51


ஃபோன் செய்துவிட வேண்டுமென்ற துறுதுறுப்பு உண்டாயிற்று கமலக்கண்ணனுக்கு டைரக்டரியில் நிறம் மாறிய பக்கத்தில் நம்பரைத் தேடிப்பிடித்து மினிஸ்டருக்கு ஃபோன் செய்தார் கமலக்கண்ணன். முதலில் வேறு யாரோ எடுத்தார்கள். அப்புறம், மந்திரி பேசினார். மந்திரியே மாபெரும் ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும், “அடடா! நானே உங்களுக்கு டெலிபோன் செய்ய வேண்டுமென்றிருந்தேன். மறந்துபோய் விட்டது” என்பதாகப் பேச்சைத் தொடங்குவாரென்று கமலக்கண்ணன் எதிர்பார்த்தார், ஆனால் எல்லாமே முற்றிலும் மாறாக இருந்தது. மந்திரி ஒரு விநாடி தடுமாறி “கமலக்கண்ணனா? எங்கேயிருந்து பேசறீங்க?” என்று கேட்ட பின்பே பேசுவது யர்ரென்று அடையாளம் கண்டுகொண்டார். அதன்பின் கமலக்கண்ணனே வலுவில். “நம்ம கடம்பவனேசுவரர் கோவில் புனருத்தராண நிதிக்கு நான் ஐயாயிரம் ரூபாய் கொடுத்திருக்கேன்” என்று. ஆரம்பித்தபோதும், “தெரியுமே! அதிலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. உங்களைத்தான் உபதலைவராய்ப்போடணும்னு கூடச் சொல்லி அனுப்பிச்சேனே” என்றும் மினிஸ்டர் கூறி விடவில்லை. “அப்பிடியா ரொம்ப நல்லது” என்று அந்தத் தகவலையே இப்போதுதான் முதல் முறையாக் கேட்பவர் போல மந்திரி வியந்தார். வந்திருந்த நிதிக் குழுவினர் தன்னிடம் மந்திரி பெயரை உபயோகித்துக் காரியத்தைச் சாதித்துக்கொண்டு விட்டதை அவர் இப்போது புரிந்து கொண்டார். தனது ஏமாற்றம் மந்திரிக்குத் தெரியா தீவகையில் அவரிடம் பேச்சை முடித்துக் கொண்டு, டெலிபோனை ரெஸ்ட்டில் வைத்தார் கமலக்கண்ணன், ஒரு வியாபாரி என்ற முறையில் இப்படிப் பெரிய பெயரை உபயோகித்துப் பெரிய காரியத்தைச் சாதித்துக் கொள்வதும் ஒரு லெளகீக தந்திரம். ஆகையால் ‘நிதிக்குழுவினர்’ மேல் அவருக்குக் கோபம் வரவில்லை. மாறாக அவர்களது சமயோசிதத்தை அவரும் மனத்திற்குள் பாராட்டவே செய்தார்.

“என்ன விஷயம். ஏதோ டெலிபோன்லே பேசிட்டிருந்தீங்களே?” என்று மனைவி விசாரித்தபோதுகூட, “ஒண்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/53&oldid=1047339" இலிருந்து மீள்விக்கப்பட்டது