பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

155


அவனுக்குப் பயந்து ஓடவேண்டுமே ஒழிய அவன் எந்த மிருகத்துக்கும் பயப்படமாட்டான். அவன் ஒரு சிற்றரசன்தான். ஆனால், அவனுடைய வேட்டையாடும் திறமை பேரரசர்களிடமெல்லாம் பரவியிருந்தது.

வழக்கம்போல அன்றும் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குப்போயிருந்தான் அவன்.முதன் முதலாகப் பார்வையில் சிக்கியது ஒரு முள்ளம் பன்றி. இருங்கோவேள் வில்லும் கையுமாகத் தன்னை நெருங்குவதை அது பார்த்துவிட்டது. உடனே உடலெங்கும் ஈட்டி முளைத்தாற்போலக் கூரிய மயிர்களைச் சிலிர்த்துக்கொண்டு ஒடத் தொடங்கிவிட்டது. இருங்கோவேள் அதை அப்படியே விட்டுவிட வில்லை. துரத்தினான். பன்றி மனம் போன போக்கில் காற்றினும் கடுகிச் சென்றது. மேடு, பள்ளம், புதர், நீரோடை, எல்லாம் கடந்து ஒடியது. அவனும் விடாமல் துரத்திக் கொண்டு ஓடினான்.

பன்றி ஓடுவதற்கு அலுக்கவில்லை. இளைக்காமல், சளைக் காமல் ஒடிக் கொண்டிருந்தது. இருங்கோவேள் துரத்துவதற்கே அலுக்கவில்லை. இளைக்காமல், சளைக்காமல் துரத்திக் கொண்டிருந்தான்.

ஒடிக் கொண்டிருந்த பன்றி ஒரு முனிவருடைய ஆசிரமத்துக்குப் பக்கத்திலிருந்த புதரில் போய்ப் பதுங்கியது. பன்றியைப் புதரிலிருந்து கலைத்து வெளியேற்றி வேட்டை யாடுவதற்கு முன்னால் வேறொரு பயங்கரக் காட்சியைத் தன் கண்களுக்கு முன்னால் அவன் கண்டான். மிக அருகில் தெரிந்த அந்தக் கோரமான காட்சி அவன் உடலிலுள்ள மயிர்க்கால்களை எல்லாம் குத்திட்டு நிற்கச் செய்தது, வில்லைத் தோளிலிருந்து எடுத்து எய்யலாம் என்றால் கை எழவே மாட்டேனென்றது.

ஆசிரம வாயிலில் மரத்தடியில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். மோனத்தில் ஆழ்ந்து தியானம் செய்து கொண்டிருந்த அவர்மேல் பெரிய புலி ஒன்று பதுங்கிப்பதுங்கிப் பாயத் தயாராகிக் கொண்டிருந்தது. முனிவரோ கண்களைத் திறக்கவே இல்லை. தன்னை மறந்த இலயிப்பில் புலன்