பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

121


அரசன் வெளிமான், தம்பி இளவெளிமானுடனும் படைகளுடனும் உடனே காவல்மரம் இருந்த இடத்தை அடைந்தான். அவன் மனத்தில் சினமாகிய நெருப்பு மூண்டு எரிந்து கொண்டிருந்தது. அங்கே காவலர்கள் கூறியபடி மிகப் பயங்கரமான தோற்றத்தை உடைய பெரிய யானை ஒன்று மரத்தை ஆட்டி அசைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்த யானைக்கு அருகிலே நின்றுகொண்டிருந்த புலவர் பெருஞ்சித்திரனாரைப் பார்த்த்போது அவனுடைய ஆத்திரம் ஆச்சரியமாக மாறியது. அதே சமயத்தில் அவனருகிலிருந்த இளவெளிமான் புலவரை’ அங்குக் கண்டதும் திருடனுக்குத் தேள்கொட்டினாற்போலத் திடுக்கிட்டான். அரசனைக் கண்டதும் புலவர் யானையின் கொட்டத்தை அடக்கி, மந்திரத்தாற் கட்டி நிறுத்தியதுபோல அதைஅமைதியாக நிற்கச் செய்தார். எல்லோரும் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.

புலவரை நோக்கி, “இது என்ன பெருஞ்சித்திரனாரே! என் காவல் மரம் உங்களுக்கு என்ன குற்றத்தைச் செய்தது?” என்று கேட்டான் வெளிமான்.

“காவல் மரம் ஒரு குற்றத்தையும் செய்யவில்லை அரசே! இப்போதெல்லாம் மரங்கள்கூடச் சில மனிதர்களைவிட நல்லவைகளாக இருக்கின்றன. சில மனிதர்கள்தாம் மரங்களைவிட மோசமானவர்களாக இருக்கிறார்கள்” இப்படிக் கூறிக் கொண்டே அவர் தம் பார்வையை இளவெளிமான் மேல் பதிய வைத்தார். சவுக்கடி பட்டது போலிருந்தது அவனுக்கு. அவன் தலை குனிந்தான். புலவர் மேலும் கூறினார் “அரசே! இந்த யானையின் முதுகிலுள்ள மூட்டைகள் நிறையப் பொற்கழஞ்சுகள் இருக்கின்றன. இது தகுதியறிந்து கொடுத்த பரிசில். நான் இப்போது அவற்றை உங்கள் தம்பி இளவெளிமானுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறேன்” அவர் கூறி முடிக்கவில்லை, “ஐயோ புலவரே என்னை மன்னித்து விடுங்கள்!” என்று அலறிக் கொண்டே அவர் காலில் விழுந்துவிட்டான் இளவெளிமான்.