பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

புறநானூற்றுச் சிறு கதைகள்


“சொல்கிறேன் கேள்! ஆனால் நான் சொல்லத் தொடங்குவதற்கு முன் குழந்தையைக் காண்பதற்காக நீ எத்தகைய தோற்றத்தோடு வந்திருக்கிறாய் என்பதை நீயே ஒருமுறை பார்த்துக் கொள்!உன் கையிலே இரத்தக்கறை படிந்த கூரிய வேல். கால்களிலே போரில் வெற்றிக்கு அறிகுறியாகப் புனைந்த வீரக்கழல்கள். உடம்பெல்லாம் வியர்வை வடிகிறது: மார்பிலே, ஆறாத பசும் புண்கள் இரணமாகக் காட்சியளிக்கின்றன. புலியோடு போர் செய்து அதைக் கொன்றுவிட்டு வந்திருக்கும் வலிமை நிறைந்த யானையைப் போலத் தோன்றுகிறாய் நீ! மலையமான் திருமுடிக்காரியின் மேல் உனக்கேற்பட்ட சினம், அவனை வென்று வாகை சூடிவிட்டு வந்திருக்கும் இப்போதும் ஆறவில்லை போலும் உன் கண்க்ளில் ஆத்திரத்தினாலும் பகைவர்களோடு போர் செய்துவிட்டு வந்ததினாலும் ஏற்பட்ட சிவப்பு இன்னும் நீங்கவேயில்லை. போரில் சிவந்த விழிகள் புதல்வனைக் கண்டபின்னும் தமது இயல்பான நிறத்தை அடையவில்லையே!”

“குழந்தை ஏன் கால்களை உதைத்துக்கொண்டு அழுகிறது என்று கேட்டால், நீங்கள் எதையெதையோ கூறுகிறீர்களே?”

“பொறு அதியா என் விடை பொருத்தமானதா, இல்லையா என்று நான் கூறப்போவனவற்றை முழுமையாகக் கேட்டுவிட்டு அதன்பின் சொல்.”

“சரி சொல்லுங்கள் தாயே, கேட்கிறேன்.”

“மாபெரும் வீரனாகிய உனக்குப் பிறந்த மகன் வீரத்திலோ, ஆண்மையிலோ உன்னைவிடத் தாழ்ந்தவனாகவா இருப்பான்...? நீ போர்க் கோலத்தோடு வந்திருப்பதைக் கண்ட உன் மகன் எதற்காக அழுகின்றான் தெரியுமா?”

“எதற்காக அழுகின்றான்?”

“தானும் இப்போதே போருக்குப் புறப்பட வேண்டும். உன்னைப்போல் வேல் ஏந்தி வீரக்கழல்களை அணிய வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறான் உன் மகன். கொண்டு வாருங்கள் வேலை என்றுதான் அவன் அழுது கால்களை உதைக்கிறான்!”