பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

57

இன்னொருமுறை, சேரநாடு முழுவதையுமே ஆண்டு வந்த வேறு ஒரு பேரரசனைக் கானச் சென்றிருந்தார் ஒளவையார். புலவர்களைப் போற்றும் இயல்புமிக்கவன் ஆகையால் அவனும் அவரை அன்போடு வரவேற்று உபசரித்தான்.தமிழ் விருந்து போல அவர் பாடிய பாடல்களையும் கூறிய நல்லுரைகளையும் செவியாரப் பருகி இன்புற்றான் அவன்.

அந்தச் சமயத்தில், தொண்டை வலியும் இருமலுமாக ஒளவையார் சற்றே நோய்வாய்ப்பட்டிருந்தார். விவரமறிந்த மருத்துவர் ஒருவர் வெள்ளாட்டுப் பால் மிகுதியாக உண்டு வந்தால் அந்த நோவு விரைவில் நீங்கிவிடும் என்று கூறினார்.

ஒளவையார், சேர அரசனிடம் பால் ஆடு ஒன்று வேண்டும் என்று கேட்டார். சேரன் உடனே தருவதாக வாக்களித்து விட்டுத் தனக்குள் சிந்திக்கலானன். “ஒளவையார் போன்ற ஒரு பெரும்புலவர் ஒரு கறவை ஆடு கேட்டார். அவருக்கு ஒரு கறவை ஆட்டை மட்டுமே நாம் பரிசிலாகக் கொடுத்தோம் என்று நாளைக்கு மற்ற அரசர்கள் நம் கொடைப் பெருமையை இழிவாக மதிப்பிட்டு விடக் கூடாது! எனவே நாம் வெறும் கறவை ஆடு மட்டும் அவருக்குக் கொடுப்பதில் பயனில்லை. கறவை ஆட்டையும் கொடுத்து அதோடு கண்டவர் வியக்கத்தக்க வேறு ஒரு பெரும் பரிசிலையும் அவருக்கு அளிக்க வேண்டும்” என்று அவன் முடிவு செய்து வைத்துக் கொண்டான்.

மறுநாள் ஒளவையார் ஆட்டைப் பெற்றுக்கொண்டு போவதற்காக அவைக்கு வந்தார்.சேரன் முதலில் அவருக்கு அவர் கேட்டபடி கறவை ஆடு ஒன்றை அளித்தான். அடுத்தபடியாக அவன் அளித்த பரிசிலைக் கண்டு ஒளவையாரே திகைத்துப் போனார். அவருக்கு முதலில் கொடுத்த கறவை ஆடு எவ்வளவு நிறை இருந்ததோ அவ்வளவு நிறை பொன்னால் அதேபோல் ஒர் ஆடு செய்து இரண்டாவதாக அவருக்கு அளிந்திருந்தான் சேரன்! கேட்பவர் எதையும் பெற்றுக்கொள்வர் என்றாலும் கொடுக்கின்ற தன் பெருமையைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தவன் அவன்!