பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

ராணி மங்கம்மாள்

இடங்களிலோ சேதுபதியின் படைவீரர்கள் எதிர்ப்பதற்குத் திரண்டு நிற்கவில்லை. எங்கும் வாழ்க்கை எப்போதும் போல் சகஜமாயிருந்தது.

எதிரியின் பகைமை அல்லது கோபத்தைக் கூடப் பொறுத்துக் கொண்டு விடலாம். ஆனால் அலட்சியத்தையோ அவமதிப்பையோ பொறுத்துக்கொள்ளவதென்பது முடியாத காரியம். கிழவன் சேதுபதி குமாரப்பபிள்ளையைக் குடும்பத்தோடு கொன்றதற்காகவும், மறவர் நாட்டைச் சுவாதீனப் பிரகடனம் செய்ததற்காகவும் தன்னைக் கண்டித்து யாரேனும் படையெடுத்து வரமுடியும் என்று எதிர்பார்த்து ஆயத்தமாயிருப்பதாகவே தெரியவில்லை. ஒரு படையெடுப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போர்க்கால ஆயத்தங்களோ அவசரங்களோ பரபரப்புகளோ எங்கும் இம்மியளவுகூடத் தென்படவில்லை என்பது ஏமாற்றமளித்ததோடு போகாமல் எரிச்சலும் ஊட்டியது.

ரங்ககிருஷ்ணன், முத்துராமலிங்க பூபதி என்னும் தனது முன்னணிப் படைத்தலைவன் ஒருவனை அழைத்துப் பேசிப் பார்த்தான். அந்தப் படைத்தலைவனும் மறவர் சீமையைச் சேர்ந்தவன் தான்.

"ஒரு பாவமும் அறியாத மக்களை நாமாக வலிந்து தாக்கக் கூடாது எங்கே நம்மை எதிர்கொண்டு மோதி எதிர்க்கிறார்களோ, அங்கேதான் நாம் போரைத் தொடங்க வேண்டும் மகாராஜா! இல்லாவிட்டால் தீவட்டிக் கொள்ளைக்காரர்களுக்கும் நமக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்" என்றான் முத்துராமலிங்க பூபதி. ரங்க கிருஷ்ணன் அவனைக் கேட்டான்.

"எங்கேயும் யாரும் நாம் படையெடுத்து வந்திருப்பதைப் பற்றிய பிரக்ஞையோ, கவலையோ, அக்கறையோ, காட்டுவதாகத் தெரியவில்லையே! வயல்களில் உழவர்கள் நிர்ப்பயமாக உழுது கொண்டிருக்கிறார்கள். வீடுகளில் குழந்தைகளைத் தாய்மார்கள் தாலாட்டும் பாடல்கள் இனிதாக ஒலிக்கின்றன. ஏற்றம் இறைப்பவர்கள் பாடும் ஏற்றப் பாட்டு நம் செவிகளில் ஒலித்த வண்ணமாயிருக்கின்றன. வயல்களில் களை எடுக்கும் பெண்களின் குரவை ஒலி விண்ணை எட்டுகிறது. களத்து மேடுகளில் நெற்