பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

67

'கெட்டிக்காரர்கள் தங்களுக்கு வேண்டாத எதிரிகளைச் சிறையிலடைக்க மாட்டார்கள்; முகஸ்துதி செய்தே வீழ்த்திவிடுவார்கள்' என்று தாய் அடிக்கடி தன்னிடம் கூறியிருப்பதை இப்போது நினைத்தான் ரங்ககிருஷ்ணன்.

கொழுந்துவிட்டு எரியும் தீயில் தண்ணீரைக் கொட்டுவதுபோல் அவன் மனத்திலிருந்த பகைமை வெப்பத்தை அணையச் செய்து உபசரித்துக்கொண்டிருந்தார் சேதுபதி, படீரென்று பேச்சைநடுவிலே முறித்து எல்லா ராஜதந்திரத் திரைகளையும் களைந்தெறிந்துவிட்டு, "நீங்கள் எங்கள் மனிதராகிய குமாரப்பிள்ளையைக் குடும்பத்தோடு கொன்று விட்டீர்கள்! சேது நாட்டைச் சுயாதீனப் பிரகடனம் செய்து கொண்டீர்கள்! இக்காரணங்களுக்காக உங்கள்மேல் நான் படையெடுத்து வந்திருக்கிறேன்" என்று முகத்துக்கு முகம் நேருக்கு நேர் சுடச்சுடச் சொல்லிவிட வேண்டும் என்று துடிதுடித்தான் ரங்ககிருஷ்ணன். ஆனால் அதுவும் அவனால் முடியவில்லை.

சேதுபதி சாமர்த்தியமாக அவனைப் பேசவிடாமல் சமாளித்தார். அவரே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

"நம்முடைய நட்பு உங்கள் தந்தையார் காலத்தில் இருந்து வளர்ந்து வருவது. பெரியநாயக்கர் அரசியல் விஷயங்களில் என்னைத் தமது வலக் கையாக நம்பி வந்திருக்கிறார் என்பதை உங்கள் அன்னையார் உங்களுக்குச் சொல்லியிருக்கலாம்."

"அதெல்லாம் சரி!.... இப்போது நான் வந்த காரியம்...."

"அதற்கென்ன அவசரம் சின்ன நாயக்கரே வந்த காரியத்தைப் பேசாமல் நீங்களும் திரும்பிப்போய் விடப்போவதில்லை. கேட்டுக் கொள்ளாமல் நானும் விட்டுவிடப் போவதில்லை."

"ஒத்திப் போடாமல் அதைப்பேசி விடுவது நம் இருவருக்குமே நல்லது நீங்களும் என்னைப் புரிந்துகொள்ளலாம். நானும் உங்களைப் புரிந்து கொள்ளலாம்."

"நாமிருவரும் இனிமேல்தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமா சின்னநாயக்கரே?"