பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

157

மறைந்து நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளுக்குத் தீயை மிதித்தது போலாகிவிட்டது. தான் இவ்வளவு அதிகாலையில் எழுந்து நீராடி நந்தவனத்துக்கு வரக்கூடும் என்று ஒரு சிறிதும் எதிர்பாராதபடி அவர்கள் சுதந்திரமாகத் தங்கள் போக்கில் பேசிக்கொண்டிருப்பதாகப் பட்டது அவளுக்கு அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்டு அவள் மனம் பதறியது.

பெரும்பாலான மனிதர்கள் சரியான அல்லது தவறான அனுமானங்களிலேயே வாழ்கிறார்கள் என்பது புரிந்தது. பலர் திரும்பத் திரும்பப் பேசி வதந்தியைப் பரப்புவதாலேயே சில தவறான அனுமானங்கள் கூட மெய்போலப் பரவ முடிகிறது. யாரும் பரப்பாத காரணத்தால் சரியான அனுமானங்கள் பரவாமலே போய்விடமுடிகிறது.

அப்போது தன் மனச்சாட்சிக்கு துரோகம் செய்யாமல் தனக்குத் தானே அந்தப் பணிப்பெண்கள் பேசியதைப் பற்றி நினைத்துப் பார்த்தாள் ராணி மங்கம்மாள். இராயசம் அச்சையாவின் ஆஜானுபாகுவான நெடிதுயர்ந்த பொன்னிறத் திருமேனியையும், காம்பீர்யமும் அறிவு ஒளியும் தேஜஸும் நிறைந்த திருமுக மண்டலத்தையும் கண்டு அவள் தன் மனத்திற்குள் அவ்வப்போது மயங்கியதுண்டு. மனத்தளவில் ஈடுபட்டது உண்டு. மனத்தளவில் ஈடுபடுவது என்பது எத்தகைய கட்டுப்பாடுள்ள பெண்ணாலும் தவிர்க்க முடியாததுதான். வெளி உலகில் வீரதீரப் பிரதாபங்கள் மிகுந்த ராஜதந்திரி-சாதுரியக்காரி என்றெல்லாம் பேர் வாங்கி இருந்தாலும் முடிவாக அவள் ஒரு பெண்தான். பெண் மனத்திற்கு இயல்பான சலனங்களும் சபலங்களும் அவளிடமும் இருக்கத்தான் செய்தன. பெண்ணும் தனிமையும் சேருவது என்பது பஞ்சும் நெருப்பும் சேருவதைப் போன்றது. வதந்தி என்ற நெருப்புப் பற்றிக் கொள்வது அப்போது பெரும்பாலும் நேர்ந்துவிடுகிறது.

பேசிக் கொண்டிருந்த பணிப் பெண்கள் மேல் கோபப்படுவதோ, அவர்களைத் தண்டிப்பதோ சரியில்லை என்று அவள் மனத்தில் பட்டது. அப்படி ஆத்திரப்பட்டுச் செயலில் இறங்குவதனாலே அவர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தார்களோ அதைத்தானே தன் ஆத்திரத்தின் மூலம் மெய்ப்பிப்பதாய் ஆகிவிடும்!