பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

67

குறைந்திருந்ததனைக் கண்டு ஒப்பிலாமணிப் புலவர், அந்தத் துறையில் போய் இறங்கினார்.

திருநீற்றுச் சம்புடத்தையும் ஏட்டுச்சுவடிக் கட்டையும் படிக்கு மேலே தண்ணீர் படாத ஓரிடத்தில், கண் பார்வைக்குத் தெரியும்படியாக வைத்துவிட்டு அரையில் துண்டு சகிதமாக வேஷ்டியைத் துவைப்பதற்காக நனைக்கத் தொடங்கினார் புலவர்.

முதல் நாளிரவு வெள்ளியம்பல மன்றத்தின் புழுதி படிந்த கல் தளத்தில் உறங்கியிருந்ததாலும், மீனாட்சி கோவில் திருமதிற் செம்மண் பட்டைகள் அவர் வேஷ்டியில் அங்கங்கே ‘முத்திரை வைத்து’ விட்டிருந்ததாலும், தண்ணிரில் நன்கு ஊறவைத்து அழுத்தித் தோய்த்து அலச வேண்டியிருந்தது. அந்த நோக்கத்துடனேதான் புலவரும் அரையில் மேல் துண்டைக் கட்டிக் கொண்டு வேஷ்டியைத் துவைத்து உலர்த்துவதற்கு எண்ணி அதை முதலில் துவைக்க ஆரம்பித்திருந்தார்.

புலவர் நான்காவது மடிப்பைத் திருப்பிப் பலமுறை அழுத்தித் துவைத்தபின் ஒய்ந்து தளர்ந்திருந்த கைகளால் அலசுவதற்காகத் தண்ணீரில் வீசிய வேஷ்டியை, நீரின் வேகம் அபகரித்து இழுத்துச் சென்றுவிட்டது. அதை எடுக்கவேண்டும் என்ற பரபரப்போடு அவர் கீழே இரண்டு படிகள் தள்ளி இறங்குவதற்குள் அது நீரில் அரை யோசனை தூரம் கடந்து போய்விட்டது. வைகையில் ‘இழுத்துச் செல்லும்’ வேகத்திற்குக் குறைவா என்ன? வேறு என்ன செய்வதென்று தெரியாமல் கொஞ்ச நேரம் மலைத்தார் புலவர். பின்பு ஒருவழியாக மனந்தேறிச் சுவடிகள் கட்டி வைத்திருந்த வேஷ்டியை அதிக கவனமாகத் தோய்த்து உலர்த்தி நீராடியபின் கட்டிக்கொண்டு, சொக்கலிங்கப் பெருமானைத் தரிசிக்கப் புறப்பட்டார். சுவடிகளை அவை சுற்றியிருந்த கயிற்றால் விபூதிச் சம்புடத்தோடு சேர்த்துக் கட்டிவைத்துக் கொண்டார். மீனாட்சி கோவிலில் சொக்கநாதருக்கு முன்பு அவர் பாடிய பாட்டு என்னவென்று நினைக்கிறீர்கள்?