பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தமிழ் இலக்கியக் கதைகள்

இப்படிக் குறும்பாக உடன் பதில் வரும் என்று தில்லை மூவாயிரவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. அவர்கள் அத்தனை பேரும் அப்போது அந்த ஒரு புலவருக்கு முன்னால் தலைகுனியும்படி நேர்ந்துவிட்டது.

சந்தர்ப்ப ஞானம் அதிகம் உள்ளவர்களால் எப்போதும் எதையும் சமாளித்து மறுமொழி கூறுவதற்கு முடியும். காளமேகப் புலவர் சந்தர்ப்ப ஞானம் அதிகமாக உள்ளவர். மிக விரைவாகக் கவி பாட வல்லவர். யாருக்கும் எதற்கும் எங்கும் அஞ்சாத இயல்புள்ளவர். அத்தகையவர் தில்லை மூவாயிரவர்களைத் திகைக்க வைத்ததில் வியப்பில்லை. மான்குட்டி அறுகம்புல்லுக் காகத் தாவுகிறது என்று கற்பனை செய்ததுதான் அற்புதம்.

65. தமிழுக்குப் பரிசளித்த தெய்வம்

உலகத்திலுள்ள எல்லா மொழிகளுக்கும், பாரத நாட்டு மொழிகளுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடுண்டு. பாரத நாட்டின் ஒவ்வொரு மொழியும் தெய்வீகத்தோடும் ஒழுக்கம், அறம் முதலிய சமயக் கோட்பாடுகளோடும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதுவும் தமிழ் மொழிக்கும் தெய்வீகத் தன்மைக்கும் மிக நெருக்கமான உறவுண்டு. அரசியலில் ஈடுபட்டிருக்கிறவர்களின் குழப்பங்கள் இந்தத் தலைமுறையில் தமிழிலிருந்து தெய்வீகத்தைப் பிரித்து விட முயல்கின்றன. தெய்வத் தன்மையிலிருந்து பிரிந்தால் தமிழ் மணமற்ற பூவாகிவிடும்! தமிழ் மொழியில் நமக்கு எவ்வளவு அக்கறை உண்டோ, அவ்வளவு அக்கறை சமய ஒழுக்கங்களிலும் அறங்களிலும் இருக்க வேண்டும்.

தமிழ் மொழியால், ஊமையான குமரகுருபரர் வாய் பெற்றார். சம்பந்தர் எலும்பைப் பெண்ணுருவாக்கினார் என்றெல்லாம் அற்புதங்கள் பழைய காலத்தில் நடந்ததாகக் தேள்விப்படுகிறோம். இப்போது அற்புதங்களை ஏன் பார்க்க முடிவதில்லையென்றால் அதற்குக் காரணம் உண்டு.