பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

133

ஈரமணலைத் தாண்டிப் புலவரை எதிர்கொண்டு அழைத்து வந்தார்.முன்பின் அறிமுகம் உள்ளவர்களானாலும் சரி, அறிமுகம் இல்லாதவர்களானாலும் சரி, அன்போடு வரவேற்று உபசரித்து ஆதரவு கொடுப்பதுதான் அவருக்கு வழக்கமாயிற்றே!

அந்தப் பெரிய பந்தலைப் போட்டு வெம்மை தணிய ஈர வெண்மணலைப் பரப்புவதைக் கண்ணும் கருத்துமாக அவரே மேற்பார்த்துச் செய்வதற்குக்கூட அவரது கொடையுள்ளமே காரணம். வெயிலில் கால்வாட நடப்போர், உடலும் மனமும் குளிரத் தங்கிச் செல்வதற்காகவும் நீர் வேட்கையோடு வருபவர்கள் தண்ணீரும் நீர்மோரும் பருகி இளைப்பாறிச் செல்வதற்காகவுமே அவர் அந்தப் பந்தலை அவ்வளவு அக்கறையோடு கவனத்துடனே மேற்பார்த்து வேலை வாங்கினார். புதிதாக வந்த புலவர் இந்த அழகான ஏற்பாடுகளை எல்லாம் பார்த்துக்கொண்டே முதலியாருடன் திண்ணை முன்குறட்டிலே சென்று அமர்ந்தார். தரையில் பரப்பியிருந்த புது மணலில் நடந்து சென்றபோது, ‘சித்திரம் வரைந்தாலும் தெளிவாகத் தெரியும் போல’ இருந்த அந்தத் துாய வெண்மணல் புலவர் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.

புலவரும் முதலியாரும் பந்தல் வேலைக்காரர்கள் மணலைப் பரப்பித் தங்கள் வேலைகளையெல்லாம் முடித்துச் சென்ற பின்னரும் மிகுந்த நேரமாக வாசல் குறட்டிலேயே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். பின், முதலியார் புலவரை அன்போடு உணவுக்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரப் பழக்கத்திலேயே புலவர் முதலியாரைத் தம்மிடம் ஈடுபாடு கொள்ளச் செய்துவிட்டார்.

தம்முடைய விருந்தினராகிய புலவரை உண்பித்த பின், குளிர்ச்சியாக இருக்கும் என்றெண்ணி வாயிலிற் புதிதாகப் போட்டிருந்த பந்தலின் கீழ் மணற் பரப்பில் ஒரு பட்டுக் கம்பளத்தை விரிக்கச் செய்து தாம்பூல சகிதம் புலவரோடு அமர்த்தார் முதலியார். கீழே குளிர்ந்த மணலின் இதமும் சூழ மாளிகைக்கு முன்புறம் இருந்த தோட்டமும் கீற்றுப் பந்தலும்,