பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

தமிழ் இலக்கியக் கதைகள்

கூத்தர் நெஞ்சு குரோதத்தால் கொதித்தது. புகழேந்தியோ எந்த விதமான எண்ணமுமின்றி நிஷ்களங்கமான நெஞ்சத்துடன் சோழன் அவையில் அமர்ந்து கொண்டிருந்தார்.அவராக ஏதாவது பேச்சைத் தொடங்கி வாளைக் கொடுப்பார். அப்போது சரியானபடி அவைக்கு நடுவிலே வைத்து அவமானப்படுத்தி விடலாம் என்று சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒட்டக்கூத்தருக்கு எதிரியின் மெளனம் ஏமாற்றத்தைக் கொடுத்தது. சோழனுடைய அவைக்குப் புலவர் என்ற பெயரில் யார் வந்தாலும் சரி, அவர்களை ஒருவர் விடாமல் மட்டந்தட்டித் தலைகுனியச் செய்து அனுப்பும் பணியை வழக்கமாகக் கொண்டிருந்தார் அவர். சாதாரணப் புலவர்களையே அந்தக் கதிக்கு ஆளாக்கி அனுப்பும் அவர் பாண்டிய நாட்டு அவைப் புலவராகப் பாண்டியனிடமிருந்து வந்திருக்கும் தம்மை யொத்தவர் போல விளங்கும் புகழேந்தியை எப்படிச் சும்மா விட்டுவிட முடியும்? ஆகவேதான் அவர் மனம் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துத் துறுதுறுப்புடனே துடித்துக் கொண்டிருந்தது.

அன்றைய அவையில் வழக்கமாக நிகழவேண்டிய அம்சங்கள் யாவும் நிகழ்ந்து முடிந்தபின் சோழ அரசனே பேச்சுக்கு நடுவே தற்செயலாகக் கவிதைகளின் இயல்பைப் பற்றிப் பேச்சை ஆரம்பித்தான். சோழன் கவிதைகளைப் பற்றிப் பேசும் அந்தச் சந்தர்ப்பத்தையே புகழேந்தியை மடக்குவதற்கு ஏற்றதாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார் கூத்தர். “அரசே, இதோ அமர்ந்திருக்கின்றாரே, பாண்டிய நாட்டுப் புலவர் புகழேந்தியார்! அவரோடு நான் ஒரு சிறு போட்டி நடத்துவதற்கு இந்த அவையில் இடமளிக்க வேண்டும். இதில் தவறாக நினைப்பதற்கு எதுவும் இல்லை. வெறும் விளையாட்டாக இந்த அவையும் தாங்களும் கண்டு இரசிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். விஷயம் வேறு ஒன்றுமில்லை, நான் ஒரு வெண்பாவின் முதல் இரண்டு அடிகளைப் பாடுவேன். புகழேந்தியார் அதன் பின்னிரண்டு அடிகளைப் பொருத்தமாகப் பாடி முடித்து விட்டால் போதும். இவ்வளவுதான்.” இவ்வாறு கூறிக் கூத்தர் விண்ணப்பித்துக் கொண்டபோது சோழவேந்தன் அதை மறுக்கவில்லை.