பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

தமிழ் இலக்கியக் கதைகள்

புலவருடைய குறை, இதயநிலை, வாழ்க்கை எவ்வாறு நடக்கிறது, சுவையற்றது என்ன, சொல்ல விரும்புவது என்ன, இந்த ஐந்து வினாக்களுக்கு அவரிடம் குறிப்பாக விடை எதிர்பார்த்த முதலியார் வெகு நேரமாகியும் ‘திருவேங்கட நாதா’ என்ற தம் பெயரை அழைக்கும் ஒரே வார்த்தையைத் தவிர வேறு எதையும் பெற முடியவில்லை. அவர் சோர்வும் ஏமாற்றமும் கொண்டார். முடிவில் அவருக்கிருந்த பொறுமை முழுதும் அவரிடமிருந்து நழுவியது. புலவருக்கு ஏதோ சித்தப்பிரமை என்று அவர் முடிவு கட்டிவிட்டார்.இப்போது புலவர் மேல் கொஞ்சம் வெறுப்புக்கூட அவருக்கு ஏற்பட்டு விட்டது. அயர்ந்துபோய் உட்காருவதைத் தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் அவர் அயர்ந்துபோய் உட்கார்ந்த பின்னும் புலவர் அவரைச் சும்மாவிடவில்லை. திரும்பவும் தாமாகவே அதே பழைய’ திருவேங்கடநாதா’ என்ற ஒரே வார்த்தைப் பல்லவியைப் பாட ஆரம்பித்துவிட்டார். முதலியார் கேள்வி கேட்பதை நிறுத்திய பின்னும் முன் கூறியதைவிடப் பலத்த குரலில் ‘திருவேங்கட நாதா’ என்று புலவர் விடாமல் அரற்றிக் கொண்டிருந்ததைக் கண்டு அவருக்கு ஒரேயடியாகக் கோபம் வந்துவிட்டது.

சினத்தில் திரும்பவும் அதே கேள்விகளைச் சீறி விழுந்து கொண்டே புலவருக்கு முன் வீசினார். இப்போது முதலியார் வாயிலிருந்து வந்த கேள்வியின் வார்த்தைகள் ஆத்திரமும் படபடப்பும் கலந்து விளங்கின. எவ்வளவோ சாந்த குணம் உடையவராகிய திருவேங்கடநாத முதலியாரே கோபம் கொள்ளவேண்டும் என்றால் இராமச்சந்திர கவிராயர் தம் ‘திருவேங்கட நாதா’ பல்லவியால் அவரை எவ்வளவு தூரம் ஆத்திரம் கொள்ளச் செய்திருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் கவிராயர் இப்போது புன்னகையுடனேயே ஒவ்வொரு முறையும் அந்த வார்த்தையைக் கூறினார். அவர் அவ்வாறு சிரிப்பதைக் கண்டு முதலியாருக்கு மேலும் பெருகியது ஆத்திரம். அதை வார்த்தைகளிற்