பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

ராணி மங்கம்மாள்

செய்தால் தடியத்தேவர் கலவரம் விளைவிக்கக்கூடும் என்று தயங்கினார் கிழவன் சேதுபதி. தடியத்தேவர் இராமநாதபுரத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தது பிரிட்டோ பாதிரியார் விஷயத்தில் ஒரு முடிவெடுக்க முடியாமல் சேதுபதியைத் தயங்க வைத்தது.

இராமநாதபுரத்தில் வெடித்த இந்தக் கிறிஸ்தவ எதிர்ப்பு உணர்ச்சி மெல்ல மெல்ல தஞ்சைக்கும் பரவியது. தஞ்சை மன்னன் உடையார் பாளையம் குறுநில மன்னனுக்கும், திரிசிரபுரத்திலிருந்த ராணி மங்கம்மாளுக்கும் அவரவர்கள் நாட்டிலிருந்த கிறிஸ்தவர்களை உடனே வெளியேற்றுமாறு தன் கைப்பட எழுதியனுப்பினான். வேறு காரணங்களுக்காகத் தஞ்சை நாட்டுடன் ராஜதந்திர நட்பு வைத்துக் கொண்டிருந்தாலும் அந்நாட்டு மன்னனின் கிறிஸ்தவ எதிர்ப்புச் சம்பந்தமான யோசனையை ராணி மங்கம்மாள் ஏற்கவில்லை. சேதுபதியைப் போலவோ, தஞ்சை மன்னனைப் போலவோ நடந்து கொள்ளாமல் நேர்மாறாகத் தன் ஆட்சி எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பில் கிறிஸ்தவர்கள் எப்போதும் போல் அமைதியாகவும், நலமாகவும் வாழுமாறு பார்த்துக் கொண்டாள் அவள். எல்லா மக்களிடமும் காட்டிய அன்பையும், ஆதரவையும், பரிவையும், கிறிஸ்தவர்கள் மேலும் காட்டினாள். அவர்கள் பாதுகாப்பாக வாழுமாறு பார்த்துக் கொண்டாள்.

"கிறிஸ்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்றாவிட்டால் இந்து சமயத்துக்கும், இந்துக் கோயிலுக்கும், இந்துக்களால் ஆளப்படும் அரசாட்சிகளுக்கும் உடனடியாக ஆபத்து ஏற்படும்" என்று தஞ்சை மன்னன் ராணி மங்கம்மாளுக்கு மிகவும் வற்புறுத்தி எழுதியிருந்தான்.

"இறைச்சி உண்பவர்கள் எல்லாரும் அருகில் வாழ்ந்தாலே அரிசிச் சாதம் உண்பவர்கள் அனைவருக்கும் உடனடியாக ஆபத்து என்பது போலிருக்கிறது உங்கள் கூற்று. அதை நான் ஏற்பதில்லை. காய்கறி, அரிசிச் சோறு உண்பவர்களையும், இறைச்சி, மீன், உண்பவர்களையும் எப்படி ஒரே ஆட்சியின்கீழ் சம உரிமைகளோடு மக்களாக வாழ விடுகிறோமோ அப்படித்தான் இந்தப் பிரச்சனை யையும் நான்பார்க்கிறேன். ஓர் ஆட்சியின் கீழ் வாழும் மக்களில் யார்