பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

193

போட்டுக் கொள்கிறீர்களே? எல்லாம் தெரிந்த உங்களுக்கு இதுகூடவா மறந்துவிட்டது? கேடுகாலம் வந்தால்தான் இடக் கையால் தாம்பூலம் போட நேரிடும் என்பார்கள்."

தன் நினைவு வந்து தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நிதானித்துப் பார்த்தபோதுதான் மங்கம்மாளுக்குப் பகீரென்றது. ஏதோ யோசனைப்போக்கில் தான் மாபெரும் தவறு செய்திருப்பது அவளுக்குப் புரிந்தது. கைத் தவறுதலாக நடந்திருந்தாலும் என்னவோ அபசகுனம் போல மனதில் உறைத்தது அது. நடக்கப் போகிற பெரிய அமங்கலம் ஒன்றின் சிறிய அமங்கல முன்னோடியாகவும் அது தோன்றியது. மனம் சஞ்சலம் அடைந்தது. கைதவறிக்கூட அமங்கலமான காரியத்தையோ பிழையான செயலையோ செய்துவிடாமல் விழிப்பாயிருக்கும் தானா இப்படி நடந்துகொண்டோம் என்றெண்ணிக் கூசினாள் அவள்.

இடக் கையால் தாம்பூலம் தரித்துக்கொள்வது மிகப் பெரிய பாவங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. சாஸ்திர விற்பன்னர்களும், அரண்மனைப் புரோகிதர்களும் உடனே வரவழைக்கப்பட்டார்கள், தான் செய்த தவற்றைக் கூறி, அதற்கு "என்ன பரிகாரம்?" என்று அவர்களைக் கேட்டாள் மங்கம்மாள்

அவர்கள் தங்களுக்குள் கலந்து பேசி நூல்களையும் ஆராய்ந்து பார்த்தார்கள், ராணி மங்கம்மாள் அவர்களைப் பணிவாக வேண்டிக் கொண்டாள்.

"இந்தப் பாவத்திற்கு என்ன பரிகாரங்களை நீங்கள் கூறினாலும் செய்யத் தயாராயிருக்கிறேன். உடனே சொல்லுங்கள்."

அவர்கள் விவரிக்கத் தொடங்கினார்கள்:"மகாராணி இதற்குப் பரிகாரமாக நீங்கள் எண்ணற்ற விதங்களில் பல தானதருமங்களைச் செய்யவேண்டும்.அன்னதானம், சாலைகள், சத்திரங்கள் அமைத்தல், சுமங்கலிகளுக்கு வஸ்திரதானமும் தீபதானமும் செய்தல், கோயில்களுக்கு மானியங்கள் அளித்தல் ஆகியவை அவசியம் செய்யப்பட வேண்டிய தானதருமங்களில் சில ஆகும்."

ரா-13