பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

ராணி மங்கம்மாள்

"பெரியோர்களே மிகவும் நன்றி. உங்கள் அறிவுரைப் படி இன்றுமுதல் ஏராளமான தான தர்மங்களைச் செய்ய உத்தர விடுகிறேன்" என்று கூறி அவர்களுக்கு உரிய சன்மானங்களை அளித்து விடை கொடுத்து அனுப்பி வைத்தாள் ராணி மங்கம்மாள். ஆனால் அரண்மனையிலிருந்து தான தருமங்கள் தொடங்கியபோது பேரன் விஜயரங்கன் அதற்குக் குறுக்கே நின்று தடுத்தான்.

"பாட்டீ! ராஜ்யத்தை என்னிடம் ஒப்படைப்பதற்குள் அரண்மனைக் கருவூலத்தை வெற்றிடமாக்கி என்னை நடுத்தெருவில் பிச்சையெடுக்க வைக்கவேண்டுமென்று சதி செய்கிறீர்களா? உங்கள் பாவத்துக்கு அரண்மனைச் சொத்தா பிணை?" என்று கடுமையாக ராணி மங்கம்மாளை எதிர்த்து வினவினான் விஜயரங்கன்.

ராணி மங்கம்மாள் முதலில் அவனது எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை. பற்பல அன்னசத்திரங்களைக் கட்டித் திறக்கும்படி உத்தரவிட்டிருந்தாள். ஏற்கெனவே மதுரையில் ஒரு பெரிய அன்னசத்திரத்தை அவள் கட்டியிருந்தாள். புதிய சாலைகள் அமைக்கச் சொன்னாள். குதிரைகள், பசுக்கள், காளைகள் நீர் அருந்துவதற்கு வசதியாக சாலை ஓரங்களில் தண்ணீர்த் தொட்டிகளைத் திறக்கச் சொல்லி உத்தரவிட்டாள். பொது மக்களுக்காகக் குடிநீர்க் குளங்கள், ஊருணிகள், கிணறுகளைத் தோண்டச் செய்தாள். கோயில்களுக்கு மானியங்களை அளித்தாள். இன்னும் பற்பல தானதருமங்களை அயராமல் செய்தாள்.

இந்தத் தானதருமங்களுக்காக மக்கள் எல்லாரும் அவளைக் கொண்டாடினாலும் பேரன் மட்டும் விரோதியாகி விட்டான். ஆட்சியைத் தன்னிடம் ஒப்படைக்கப் பாட்டி தாமதப்படுத்துவதாகப் புரிந்துகொண்டு கலகம் செய்யவும் எதிர்ப்புக் குரல் கொடுக்கவும் தயங்கவில்லை அவன். அதற்காக அவனை யார் தூண்டி விட்டிருக்கிறார்கள் என்பதையும் ராணிமங்கம்மாளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரண்மனையிலேயே சில உட்பகைப் பேர்வழிகளும், கலகக்காரர்களும் அவனைத் தூண்டுவதாகத் தெரியவந்தது. அவர்களை மங்கம்மாளால் உடனடியாகக் கண்டு பிடித்துத் தண்டிக்கவும் முடியவில்லை. குலத்தைக் கெடுக்க வந்த