பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

71

இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்ச்சியின், அல்லது காரியத்தின் விளைவைத் தன் கற்பனைக் குறிப்பினால் வேறொன்றாக ஏற்றிப் பாடுவதுதான் தற்குறிப்பேற்றம். இதை நளினமாகவும் கவிதையின் மோகனம் கெட்டுப் போகாமலும் அமைத்துக் காட்டக்கூடிய தனிப்பாடல்கள் அநேகம். அவைகளை எத்துணை முறை படித்தாலும் இனிமையும் சுவையும் குன்றித் தோன்றுவதே இல்லை.

தனிப்பாடல் திரட்டிலே இராமச்சந்திர கவிராயர் பாடல்கள், ஏழைமையின் மனோபாவத்தையும், புலமை உள்ளத்தின் பொறுக்க முடியாத வேதனையையும், தமக்கு நிகரற்ற முறையில் சித்திரித்துக் காட்டுவது போலவே மேலே கூறிய விதமான கற்பனைகளையும் அழகாகச் சித்திரித்துக் காட்டுகின்றன. இந்த இருவகைத் தகுதிகளையும், கவிராயர் பால் நாம் கண்டு அனுபவிக்கும் போதுதான் அவரைப் பொறுத்து எழுந்த இம்முடிவு வலுப்பெறும்; அவர் புலமைத் திறமும் சுவைத் தேர்ச்சியும் நமக்குப் புலப்படும்.

மாதிரிக்குத் தஞ்சாவூர்க் குருவப்ப பூபன் என்ற கொடை வள்ளல்மீது அவர் பாடிய பாடல் ஒன்றைக் கண்டு அனுபவிப்போம்.

தஞ்சாவூர்க் குருவப்ப பூபன் அந்தப் பகுதியிலேயே தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருஞ் செல்வன். தமிழார்வம் பொருந்தியவன். கருணைக்குக் குறைவில்லாத அவன் நெஞ்சம் தமிழ்ப் புலவர்களுக்கும் வேண்டுகோளுடன் தேடிவரும் பிறருக்கும் இல்லையென்று சொல்ல நினைத்தும் அறியாது. அந்த வட்டாரத்துப் புலவர்க்கும் இரவலர்க்கும் மட்டுமல்ல, எங்கிருந்து வந்தாலும் சரி, எல்லோருக்கும் கண்கண்ட தற்பக மரமாக விளங்கி வந்தான் குருவப்ப பூபன். இத்தகைய வள்ளலைப் பலமுறை சந்தித்துப் பாடி மகிழ்ந்து பரிசிலும் பெற்ற பழக்கம் இராமச்சந்திர கவிராயருக்கு மிகுதியாக உண்டு. அடிக்கடி அவன் போற்றுதலில் மகிழ்ச்சி கண்டார் கவிராயர். குருவப்ப பூபனோ, அவர் வந்துவிட்டால் உலகையே மறந்துபோய் அவருக்கு முன்னால்