பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

171

ஒரு சில தலைமுறைகளுக்கு முன் இருந்த தமிழ் நாட்டு வாழ்வு வேறு இப்போதுள்ள வாழ்வு வேறு. பழைய தலைமுறையில் ஏழைகளாக இருந்தும் வள்ளலாக வாழ முயன்ற மனிதர்கள் இருந்தார்கள். இப்போதோ வள்ளலாக இருக்கத் தகுதியுள்ளவர்களும் ஏழைகளைப் போல் வாழ விரும்புகிறார்கள். தம் பெருமையையும் நிலயையும் பிறருக்கு உதவுவதற்காகத் தாழ்த்திக் கொள்ளக் கூடாதே என்று எண்ணுகிற காலம் இது.

ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்னால் மற்றவர்களுக்கு உதவி செய்வது தான் பண்பாடு என்று கருதிய ஒரு மனிதரைப் பற்றி இங்கே பார்க்கலாம். அப்படிப்பட்ட மனிதர்கள் நமது இன்றைய சமூகத்தில் இல்லாவிட்டாலும் பழைய பாடல்களிலும் இலக்கியங்களிலும் இருக்கிறார்கள்.

தொண்டை நாட்டு மறவனுாரில் அரங்கேச வள்ளல் என்ற பிரபு ஒருவர் இருந்தார். அந்த ஊரிலேயே பெருஞ்செல்வராதலால் ஊர்மக்கள் அவரிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் ஏற்பப் பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக அவர் வாழ்ந்து வந்தார். பிறருக்கு இயன்றவரை உதவி செய்து வாழ்வதுதான் பண்பாடு என்று எண்ணுபவர் அவர். பிறரோடு பழகுவதிலும் பேசுவதிலும் எளிமையாக நடந்து கொள்வார். -

அவருடைய உள்ளம் எவ்வளவுக்குக் கருணை மயமானது என்பதை விளக்குவது போல் ஒரு சம்பவம் நடந்தது. புலவர் குடியிற் பிறந்த பாணன் ஒருவன் மறவனூருக்கு வந்தான். அவனுடைய சொந்த ஊர் எங்கோ வெகு தொலைவில் இருந்தது. ஊற்றார் உறவினர்களைப் பிரிந்து நாடோடியாகத் திரிந்து சுற்றிக் கொண்டிருந்தான் அவன். மெலிந்த உடல் அவனுக்கு அதில் நோய்கள் வேறு அடிக்கடி வந்து பற்றிக் கொண்டு விடும்.

மறவனூரில் சில நாட்கள் தங்கியிருந்த அந்தப் பாணன், ஒரு நாள் யாரும் எதிர்பாராத விதமாக இறந்து போனான். இன்னிசை பொழிந்த அவன் உடல் பிணமாகிக் கிடந்தது. உற்றார், உறவினரில்லாத நாடோடிப் பாணனின் பிணத்தை யார்