பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

69

"அஜாத சத்ரு என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு தொடர் கேள்விப் பட்டிருப்பீர்கள் சின்ன நாயக்கரே!"

"அதற்கென்ன இப்போது? "தனக்கு இன்னும் எதிரியே பிறக்கவில்லை என்று துணிந்திருக்கிற தீரனைப் பற்றிய தொடர் அது."

"அந்தத் தொடர் வாழ்வில் எனக்கு மிகவும் விருப்பமானது, சின்ன நாயக்கரே!"

இதைக் கேட்டு ரங்ககிருஷ்ணன் சேதுபதியின் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். அவருடைய முகமே அவருக்கு ஒரு முகமூடியாயிருந்தது. அவனால் அவரது உள்ளே ஓடும் எண்ணங்களை அப்போது நிறுத்துப் பார்க்க முடியவில்லை.

அரசவை கலைந்தது. ரங்ககிருஷ்ணனோடு உடன் வந்திருந்தவர்களை விருந்தினர்கள் பொதுவாக உணவருந்தும் அரண்மனைப் போஜனசாலைக்கு உரியவர்களோடு அனுப்பி விட்டு அவனை மட்டும் தன்னோடு தனியே அழைத்துக்கொண்டு சென்றார் சேதுபதி.

அவர்களுக்குச் சேதுபதியின் குடும்பப் பெண்டிரே பரிமாறினார்கள். அந்த அலங்கார அறையில் சிறப்பான சூழ்நிலையில் நெய் மணம் கமழும் அதிரசங்களையும், தேனில் பிசைந்த தினை மாவையும் உண்ணும்போதும் ரங்ககிருஷ்ணனின் மனம் என்னவோ கசப்பாகத்தானிருந்தது. சேதுபதி அவனை விழுந்து விழுந்து உபசரித்தார். உளுந்து அரிசியோடு வெந்தயமும் சேர்த்து அரைத்து மிருதுவாகவும் பத்தியமாகவும் வார்க்கப்பட்ட மெத்தென்ற தோசைகளும், நாசிக்கு இதமான கொத்தமல்லி வாசனையோடு கூடிய துவையலும் உண்ண ருசியாயிருந்தன. விருந்தோம்பலிலும் பிற உபசரணைகளிலும் அவனை மிகமிகக் கவனமாகவும், மரியாதையோடும் நடத்தினார் சேதுபதி.

"சின்ன நாயக்கரே! அரசர்கள் என்பதற்காகவோ, பேரரசர்கள் என்பதற்காகவோ நான் மயங்கிப் பயந்து மதிப்பதில்லை. இந்த அரண்மனையில் மிகவும் வேண்டியவர்களை மட்டும்தான் இப்படி என் குடும்பப் பெண்களே முன்வந்து உபசரிப்பார்கள்."