பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

ராணி மங்கம்மாள்

'தன் தாய் கையாலாகாதவள். தான் சிறுபிள்ளை' என்ற எண்ணத்தில்தான் சேதுபதி இவ்வளவும் செய்கிறார் என்று அவனுக்குப் பட்டது.

தனது படைத் தலைவர்களில் ஒருவனாகிய முத்து ராமலிங்க பூபதியைக் கூப்பிட்டு ரங்ககிருஷ்ணன் மறுபடியும் பேசிப் பார்த்தான்.

"சேதுபதியின் படைகள் நம்மை எதிர்க்க வரவில்லை. மறவர் சீமைக்குள் வெகுதூரம் ஊடுருவி நாம் முன்னேறி விட்டோம். நாம் கடந்து வந்துவிட்ட பகுதிகளை நாமே வென்று கைப்பற்றி விட்டதாகக் கருதலாமா?"

"தர்ம சங்கடமான நிலை அரசே! இப்போது நாம் வென்றதாகவும் சொல்ல முடியாது. தோற்றதாகவும் சொல்லிவிட முடியாது சிங்கம் அயர்ந்து உறங்கும்போது அதன் குகைக்குள் தெரிந்தோ, தெரியாமலோ நுழைந்துவிட்ட புள்ளிமான் அதைத் தன் வெற்றியாகச் சொல்லிக் கொண்டுவிட முடியுமா? நம் நிலையும் அதுதான்..."

சேதுபதி சிங்கம். நாம் மான். இல்லையா?"

"நம்மைக் குறைத்துச் சொல்லவில்லை அரசே! போரில் நாம் எதிரியை மதிப்பது தவறாகாது."

"வெற்றியும் தோல்வியும் தெரியாமலே எவ்வளவு தூரம்தான் படைகளோடு முன்னேறுவது?"

"இராமநாதபுரம் போய்ச் சேதுபதியைச் சந்தித்து விட்டால் இரண்டில் ஒன்று தெரிந்து விடும் அரசே!"

"போர்க்களத்தில் சந்திக்க வேண்டிய எதிரியை அரண்மனையிலா போய்ச்சந்திப்பது?"

"அரசியலில் நிரந்தரமான எதிரியுமில்லை. நிரந்தரமான நண்பனுமில்லை. சந்தர்ப்பங்கள்தான் நட்பையும், பகையையும் உருவாக்குகின்றன என்று அமரராகி விட்ட தங்கள் தந்தையார் அடிக்கடி சொல்வது உண்டு அரசே!"

தனக்கு மறுமொழி கூறுகிறவனுடைய வார்த்தைகளை அணு அணுவாகக் கவனித்து அதில் எந்தச் சிறு தொனியிலும் கூட