பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

223

நேர்ந்தால் மறந்துவிடாமல் ஞாபகமாக அவனை ஒரு கேள்விகேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.

மெல்ல மெல்ல நினைவு நழுவியது. கிட்டத்தட்ட ஒரு மண்டலம் வரை பட்டினி போடப்பட்ட உடல் நினைவு மங்குவதும், மலர்வதுமாக இருந்தது. தனிமைக் கொடுமை வேறு.

தான் சிறை வைக்கப்பட்டிருந்த அறையை நோக்கி யாரோ நடந்து வருகிற காலடி ஓசை கிணற்றுக்குள்ளிருந்து கேட்கிறாற் போல் மங்கலாக ஒலித்தது. பேரனாக இருக்குமோ என்று ஒரு சிறிய சந்தேகத்துடன் பிரக்ஞையை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு எழுந்திருக்க முயன்றாள் அவள்.

பிரக்ஞை நழுவியது. உடல் தள்ளாடி நடுங்கியது. எழுந்திருக்க முடியவில்லை. அரும்பாடுபட்டுப் பேரனிடம் கேட்க விரும்பிய கேள்வியை வலிந்து முயன்று ஞாபகத்தில் கொண்டு வருவதற்கு மீண்டும் தனக்குத் தானே முயற்சி செய்தாள் அவள்.


30. இருள் சூழ்ந்தது.

ணர்வு மங்கிய அந்த நிலையிலும் கூடப் பேரனுக்குக் கெடுதல் நினைக்கவில்லை ராணி மங்கம்மாள். 'தனக்குக் கெடுதல் செய்தாலும் நாட்டு மக்களுக்கு அவன் நன்மை செய்து சிறப்பாக ஆட்சி நடத்தி நாயக்க வம்சத்துக்கு நற்பெயர் தேடித்தர வேண்டும்' என்றே அவள் உள்ளூற எண்ணி அவனை வாழ்த்தினாள்.