பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

185

யார் எந்த எந்த மதநெறியை ஏற்றுக் கொண்டு அநுசரித்து வாழ விரும்பினாலும் அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அதுதான் தர்மம். இதை அரசாட்சி வற்புறுத்தித் திணிக்க முடியாது என்று நினைக்கிறேன்" என்று தஞ்சை மன்னனுக்கு மிக விளக்கமாக மறுமொழி அனுப்பியிருந்தாள் ராணி மங்கம்மாள்.

சேதுபதி கிறிஸ்தவர்களை எவ்வளவுக்கு எவ்வளவு வெறுத்தாரோ அவ்வளவுக்கு அவ்வளவு ராணி மங்கம்மாள் அவர்கள்மேல் அன்பும் ஆதரவும் காட்டினாள்.

பங்காளி தடியத்தேவருக்குத் தெரியாமலே பாம்பாற்றங் கரையில் இருந்த ஓரியூருக்குப் பிரிட்டோ பாதிரியாரை அனுப்பி அங்கு அவரைக் காவலில் வைக்க ஏற்பாடு செய்தார் கிழவன் சேதுபதி, ஓரியூர் சேதுபதியின் ஆட்சிக்கு அடங்கிய சிறு தலைக்கட்டு ஒருவரால் நிர்வாகம் செய்யப் பட்டு வந்தது. சேதுபதிக்கு மிகவும் வேண்டியவர் அந்த ஓரியூர்த் தலைக்கட்டுத் தேவர். அந்தத் தேவருக்கு எழுதியனுப்பிய அந்தரங்கக் கடிதத்தில் பாதிரியாரைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்று விடுமாறு உத்தரவு இட்டிருந்தார் கிழவன் சேதுபதி.

ஓரியூர்த் தலைக்கட்டு பாதிரியாரைக் கொல்லத் தயங்கினார். ஆனால் அவருடைய பிரதானியாயிருந்த முருகப்ப பிள்ளை என்பவர் துணிந்து சேதுபதியின் கட்டளைப்படி பாதிரியாரை உடனே கொன்றுவிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சேதுபதியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் தேவரை வற்புறுத்தி நிர்ப்பந்தப்படுத்தினார்.

கிழவன் சேதுபதியின் கடுங்கோபத்துக்கு ஆளாகிச் சிரமப்படுவதைவிடப் பாதிரியாரைக் கொன்று விடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்தார் ஓரியூர்த் தலைக்கட்டுத் தேவர்.

இம்முடிவின் விளைவாக ஜான்டி பிரிட்டோ பாதிரியார் கொல்லப்பட்டார். அவர்களுடைய உடல் சின்னாபின்னப் படுத்தப் பெற்றுக் கழுகுகளுக்கு உணவாக இடப்பட்டது.

நீண்ட நாள்களுக்கு இந்தக் கொலை இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மறவர் சீமையில் எழுந்த புயலும் ஓயவில்லை.