பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

207

கலகக்காரர்களுமாகிய பலரது ஒத்துழைப்போடு கலகத்தில் இறங்கி விடத் தீர்மானம் செய்திருப்பது புரிந்தது. அதிக இடையூறாயிருக்கும் பட்சத்தில் ராணி மங்கம்மாளையும், தளவாய் அச்சையாவையும், ஒழித்துவிடக் கூடத் தயங்காத கல்நெஞ்சம் படைத்தவனாக அவன் இருப்பானென்று தெரிந்தது. ஒற்றர்கள் வந்து கூறிய செய்திகள் பல அச்சையாவையும் ராணியையும் துணுக்குற வைத்தன.

விஜயரங்கனைத் தூண்டி விடுவதற்கு மிகவும் பலம் வாய்ந்த கூட்டம் ஒன்று பின்னாலிருப்பது அவர்களுக்குப் புரிந்தது.

தவிர்க்க முடியாத வலிமையுள்ள படை வீரர்கள் போன்ற சதியாளர்கள் அவனோடு ஒத்துழைக்கிறார்கள் என்ற உண்மையும் தெரியவந்தது. வன்முறையில் ஈடுபட்டுத் தாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு எதிராக இருப்பவர்களைக் கொன்று குவித்தாவது ஆட்சியைக் கைப்பற்றிவிடுவது என்று விஜயனும் அவனை ஊக்குவிப்பவர்களும் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒற்றர்கள் வந்து தெரிவித்தார்கள்.

வேறு வழியின்றி ராணியும் தளவாயும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். விஜயரங்கன் நினைத்தபடி நினைத்த இடங்களுக்குப் போகவும் வரவும், பேசவும் முடிவதால்தான் இதெல்லாம் சாத்தியமாகிறது. அவனுடைய இயக்கத்தைக் கட்டுப்படுத்தி அவனைக் காவலில் வைத்துக் கண்காணித்து வந்தால் இதெல்லாம் ஓரளவு குறையும் என்று அவர்கள் கருதினார்கள். அவனைத் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பவர்களை அவனும், அவனை அவர்களும் சந்தித்துக் கொள்ள முடியாதபடி செய்து விட்டாலே போதுமென்று இருவருமே எண்ணினார்கள்.

அரண்மனையில் விஜயரங்கன் தங்கியிருந்த பகுதிக்குள்ளேயே அவனைச் சிறைப்படுத்தி விடத் தந்திரமாக ஏற்பாடாயிற்று. அவனுக்குத் தெரியாமலே அவனைச் சுற்றி இந்த ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. கெட்ட எண்ணத்தோடு அவர்கள் இதைச் செய்யவில்லை. நல்லெண்ணத்தோடுதான் செய்தார்கள். தீயவர்களின்