பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

153

ஆசையுடன் கோட்டைக்குள் நுழைந்தபோது மறைந்திருந்த மதுரைப் படை திடீரென்று பாய்ந்து அவர்களைத் தாக்கியது. எதிர்பாராத அந்தத் தாக்குதலினால் அவர்கள் பதறி நிலைகுலைந்தனர். எதிர்த்துத் தாக்குவதற்கு அவர்களிடம் ஆட்கட்டோ ஆயுத பலமோ இல்லை. மதுரைப் படைவீரர்கள் எட்டுவீட்டுப் பிள்ளைமார்களின் ஆட்களில் பலரைக் கொன்றுவிட்டார்கள். எஞ்சிய மிகச் சிலர் தப்பி ஓடிவிட்டார்கள். மந்திரம் போட்டு அடக்கியது போல எட்டு வீட்டுப் பிள்ளைமார்களின் கொட்டம் இரவோடிரவாக ஒடுங்கிவிட்டது. பிழைத்தவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள். மதுரைப் படை வீரர்களும், படைத் தலைவனும் வெற்றி ஆரவாரத்துடனும், மகிழ்ச்சியுடனும் கோட்டைக்குள் ரவிவர்மனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் பொழுதுவிடிவதற்குள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. எதிர்பாராதது நடந்துவிட்டது. கோட்டைக்குள் மதுரைப் படை வீரர்களை வைத்துவிட்டு வெளியேறியிருந்த ரவிவர்மன் வெளியே போய்த் தன் ஆட்களை அதிக அளவில் திரட்டியிருந்தான். வேறுவிதமான ஆசை அவனுக்கு உண்டாயிற்று. தன்னிடம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி மதுரைப் படைத் தலைவனும் படைகளும் எட்டு வீட்டுப்பிள்ளைமார்களை அழித்துத் துரத்தியபின் ரவிவர்மன் மதுரைப் படையையும் தொலைத்துவிட்டு ஏமாற்ற எண்ணினான். மதுரைப் படைத் தலைவனுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதியைக் காற்றிலே பறக்கவிட்டான். ஆயத்த நிலையில் இல்லாதிருந்த மதுரைப்படைகளைப் பின்னிரவில் தன் ஆட்களோடு திடீரென்று கோட்டைக்குள் புகுந்து தாக்கத் தொடங்கினான் ரவிவர்மன்.

இதை முற்றிலும் எதிர்பாராத மதுரை நாட்டுப் படைவீரர்களும் அவர்கள் தலைவனும் திணறிப் போனார்கள். தீட்டிய மரத்திலேயே பதம் பார்த்த கதையாக முடிந்துவிட்டது. தனது நிரந்தர எதிரியாகிய எட்டு வீட்டுப் பிள்ளைமார்களைத் தொலைத்தவுடன் அதற்குப் பேருதவி புரிந்தவர்களாகிய பாண்டிப் படைகளையும் தொலைத்து விடத் துணிந்திருந்தான் ரவிவர்மன்.