பக்கம்:நித்திலவல்லி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


35. இன்னும் ஓர் ஓலை

தோளிலும் மார்பிலும் சந்தனம் மணக்க, பூக்களின் வாசனை கமழ, முந்திய இரவின் நளின நினைவுகள் நெஞ்சில் இனிமை பரப்ப இளையநம்பி விழித்து எழுந்திருந்து மேன்மாடத்திலிருந்து கீழே இறங்கி வந்தபோது அழகன் பெருமாள் திருமோகூர் வேளாளர் தெருக்கரும்பொற் கொல்லனோடு காத்திருந்தான். அவனும், கொல்லனும் இளையநம்பியின் வருகைக்காகவே காத்திருப்பது போலிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பின்பும் தோற்றத்தின் தனித்தன்மை காரணமாக அந்தக் கரும்பொற்கொல்லனை இளையநம்பிக்கு நன்றாக நினைவிருந்தது. திருமோகூர்ப் பெரியவர் மதுராபதி வித்தகரைச் சந்திப்பதற்காக வந்தபோது தான் காணநேர்ந்தது முதல் தன் மனிதன் இவனே என்ற ஞாபகத்தையும் தவிர்க்க முடியவில்லை. மலரும் முகத்தில் புன்னகையைப் புன்னகையால் எதிர்கொண்டு அந்தக் கரும்பொற்கொல்லனை வரவேற்றான் இளையநம்பி. இளையநம்பி எதிர்பார்க்க வில்லை என்றாலும் ‘கயல்-’ என்று நல்லடையாளச் சொல்லைக் கூறிவிட்டே அவனை வணங்கினான் கரும் பொற்கொல்லன். சிரித்தபடியே இளையநம்பி அவனிடம் கூறினான்: “நண்பனே! பயப்படவேண்டிய அவசியமில்லை! நீ அழகன் பெருமாளோடு வந்து என் எதிரே நிற்கிறாய்... நல்லடையாளச் சொல்லைக் கூறாவிட்டாலும் உன்னை நான் நம்புவேன். நீ நம்மைச் சேர்ந்தவன்.”

இப்படிக் கூறிய சுவட்டோடு இந்த வார்த்தைகளால் தான் முன்பு திருமோகூரில் நுழைந்த நாளன்று அவன் தன்னை நம்பாமல் நல்லடையாளச் சொல்லை எதிர்பார்த்துச் சோதனை செய்ததை இப்போது அவனிடம் குத்திக் காட்டத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/200&oldid=716222" இலிருந்து மீள்விக்கப்பட்டது