பக்கம்:நித்திலவல்லி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

195



“தென்றல் பொதிகை மலையில் பிறக்கிறது. ஆனால் மதுரைக்கு வரும் போது அது இன்னும் அதிகச் சிறப்படைகிறது. அதிகப் புகழ் பெற்று விடுகிறது.”

“அதாவது மதுரைத் தென்றல், தமிழ்த் தென்றலாக வீசுகிறது என்றுதானே சொல்கிறாய்? ஆம். ஒரு தென்றல் இன்னொரு தென்றலுடன் இங்கே கூடுகிறது. மொழிகளிலே தென்றலாகிய தமிழ் காற்றின் இளவரசியாகிய மந்தமாருதத்தைச் சந்திக்கும் இடம் இந்த நான்மாடக்கூடல் நகரம்தான்.”

“நீ கூறுவதை ஒப்புக் கொள்கிறேன் இரத்தினமாலை! ஆனால் ஒரு சிறு பாடபேதம். இந்த இடத்தில் இப்போது இரண்டு தென்றல்கள் இருப்பதாக நீ சொல்கிறாய். ஆனால் மூன்று தென்றல்கள் இங்கு சூழ்ந்து கொண்டு குளிர்விப்பதை இப்போது நான் காண்கிறேன்.”

“அது எப்படி?”

“பொதியமலைத் தென்றலாகிய மந்தமாருதம்! மதுரைத் தென்றலாகிய தமிழ் அழகுத் தென்றலாகிய நீ!”

இதைக் கேட்டு அவள் தலை குனிந்தாள். அவளது வலது கால் கட்டை விரல் தரையில் மனத்தின் உணர்வுகளைக் கோலமிட்டுப் பார்க்க முயன்றது. ‘நீ வென்று கொண்டிருக்கிறாய், வென்று கொண்டிருக்கிறாய்’ என்று அவளுடைய மனம் அவளை நோக்கி உள்ளேயே குதூகலக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. ‘உன் வெற்றியை உன் முன் தோற்றுப் போய்க் கொண்டிருப்பவனுக்கே புரிய விடாமல் அவனே வென்றிருப்பது போல் உணரச் செய்!'- என்றும் அவள் உள் மனம் அவளை எச்சரித்துக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் அவள் உணர்ச்சிகளால் மிகவும் நெகிழ்ந்து, மலர்ந்து, தளர்ந்து பலவீனமான அனிச்சம் பூப் போல் ஆகியிருந்தாள். தன்னால் அழகுத் தென்றல் என்று புகழப்பட்ட அந்த மந்த மாருதம் தன்னுடைய தோள்களையும் மார்பையும் தழுவி வீசிக் குளிர்விப்பதை இளையநம்பி உணர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/196&oldid=945281" இலிருந்து மீள்விக்கப்பட்டது