பக்கம்:நித்திலவல்லி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

நித்திலவல்லி / முதல் பாகம்



சந்தித்து விட்டு இரத்தினமாலை திரும்பி வந்ததும் ஏதாவது விவரம் தெரியும் என்று நம்புகிறேன்” என்று இடையே அழகன் பெருமாள் பேசியபோது கூட,

“இப்படி நமக்குள் பொதுவாக நம்பவும், செயலாற்றவும் காரியங்கள் இருப்பதால்தான் நாம் ஒரு குழுவாகச் சேர்ந்திருக்கிறோம் அழகன் பெருமாள்!” என்று மறுமொழி கூறிவிட்டு, மீண்டும் சிரித்தபடியே அவன் கண்களில் மின்னும் உணர்ச்சிகளை ஆழம் பார்த்தான் இளையநம்பி. அழகன் பெருமாளும் விட்டுக் கொடுக்காமல் பதிலுக்கு முக மலர்ந்து சிரித்தானே ஒழிய, இளையநம்பியின் சொற்களில் இருந்த குத்தலைப் புரிந்து கொண்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை.

இருந்த வளமுடைய விண்ணகரத்தில் அர்த்த சாம வழிபாடும் முடிந்த பின்பே இரத்தினமாலை திரும்பினாள். பல்லக்கிலிருந்து இறங்கி வந்ததும் வராததுமாக, “உன் முகம் மலர்ச்சியாயிருப்பதைப் பார்த்தால் இருந்த வளமுடைய பெருமாள் பரிபூரணமாகத் திருவருள் புரிந்திருப்பார் என்றல்லவா தோன்றுகிறது?” என்று கூறி அவளை வரவேற்றான் இளையநம்பி. அவள் முகமும் அவனை நோக்கி மலர்ந்தது. அவள் அவனிடம் கூறினாள்:

“திருவருளுக்கு எதுவும் குறைவில்லை! ஆனால் என்ன தெரிந்து கொண்டு வந்திருக்கிறேன் என்பது எனக்கே புரியாமல், எதையோ தெரிந்து கொண்டு வந்திருக்கிறேன்.”

“அப்படியானால் போன காரியம் ஆகவில்லையா?” என்று கேட்டான் அழகன் பெருமாள்.

“இனிமேல்தான் தெரிய வேண்டும்!” என்று கையோடு திரும்பக் கொண்டு வந்திருந்த பூக்குடலையைக் காண்பித்தாள் அவள். குடலை நிறைய அடர்த்தியாகத் தொடுத்த திருத்துழாய் மாலை ஒன்று பொங்கி வழிந்தது. திருத்துழாய் நறுமணம் எங்கும் கமழ்ந்தது.

அவள் கூறியதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை; அவளே மேலும் தொடர்ந்து கூறலானாள்:--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/185&oldid=945285" இலிருந்து மீள்விக்கப்பட்டது