பக்கம்:நித்திலவல்லி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

201



சோர்வோடு இருப்பதாகத் தெரிகிறது. நீராடி வாருங்கள்! பேசலாம்!"- என்றான் அழகன்பெருமாள். தன்னைத் தவிரப் பிறர் அனைவரும் நீராடிக் காலைக் கடன்களை எல்லாம் முடித்து ஆயத்தமாயிருப்பதைக் கண்டு இளையநம்பி நீராடுவதற்கு விரைந்தான். காலந்தாழ்ந்து எழுந்ததற்காக அன்று அவன் வெட்கப்பட்டான்.

கூடத்தில் மயில் தோகை விரித்திருப்பது போல் அமர்ந்து, இரத்தினமாலை ஈரக் கூந்தலுக்கு அகிற்புகை ஊட்டிக் கொண்டிருந்தாள். அவன் வரக் கண்டதும் அவள் நாணத்தோடு எழுந்து நிற்க முயன்றாள்.

“நீ எழுந்து நிற்க வேண்டாம்! உன் செயலைக் கவனி” என்பது போல் கையினாற் குறிப்புக் காட்டி விட்டுப் புன்முறுவல் பூத்தபடி மேலே நடந்தான் அவன். அவள் கூந்தலின் நறுமணமும், அகிற்புகை வாசனையும் வந்து அவன் நாசியை நிறைத்துக் கிறங்கச் செய்தன. இந்த நறுமணங்கள் எல்லாம் அவள் பொன்மேனியின் நறுமணங்களை அவனுக்கு நினைவூட்டின. நீராடுவதற்குச் செல்ல இருந்தவன் தேனூர் மாந்திரீகனின் நினைவு வரப்பெற்றவனாகத் திரும்பச் சென்று அவனைக் கண்டான். இளையநம்பி காணச் சென்றபோது, அவன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருந்தான். புண்கள் ஓரளவு ஆறியிருந்தன. இளையநம்பியைக் கண்டதும், அவன் முகம் மலர்ந்தான். அவனை அன்போடு விசாரித்த பின், சிறிது நேரம் ஆறுதலாக உரையாடிக் கொண்டிருந்து விட்டுப் பின்பு நீராடச் சென்றான் இளையநம்பி. அவன் உடல் நீராடியது என்றாலும் மனம், வந்திருக்கும் திருமோகூர்க் கரும்பொற் கொல்லன் சொல்லப் போகும் செய்திகள் என்னவாக இருக்கும் என்று அறிவதிலேயே இருந்தது.

நீராடி முடிந்ததும், நகரின் திருவாலவாய்ப் பகுதி இருந்த திசை நோக்கி இறையனார் திருக்கோயிலை நினைத்து வணங்கினான் அவன். தமிழ்ச் சங்கத்தின் முதற்புதல்வராக அமர்ந்து பெருமைப்பட்ட கண்ணுதற் பெருங்கடவுளைக் கோயிலுக்கே சென்று வழிபடவும் வணங்கவும் முடியாதபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/202&oldid=945277" இலிருந்து மீள்விக்கப்பட்டது