பக்கம்:வேமனர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைகளே நையப்புடைக்கின்றாள். நற்பழக்கமற்ற அக்குழந்தைகள் அவருடைய மகிழ்வற்ற நிலையை மேலும் அதிகரிக்கச் செய்கின்றனர்.

கூட்டுக் குடும்பத்தினின்றும் பிரிந்துசென்ற பிறகு வேமனர் தம் பங்கிற்குப் பிரிந்த பண்ணையை விடாமுயற்சியுடன் பேணி வளர்க்கின்றார். அதில் நல்ல பண வருவாயை நல்கும் பயிர்களான கரும்பு, எண்ணெய் விதைகள் போன்றவற்றை விளைவிக்கின்றார், அதன் பிறகு வீட்டில் வளர்ந்துவரும் மகிழ்வற்ற நிலைமையின் காரணமாக அவர் பண்ணையைப் புறக்கணிக்கின்றார், அதனால் அதன் விளைச்சல் குறைந்துகொண்டே போகின்றது. குடும்பத்தில் மேலும் பல குழந்தைகள் சேர்ந்தமையால் அதன் வரவு செலவுத் திட்டம் ஏறிக்கொண்டே போகின்றது. கடன் வாங்கிய பணத்தைக் கொண்டு ஒருவாறு காலத்தைத் தள்ளுகின்றார். அதன் பிறகு ஓர் ஆண்டு கரும்புப் பயிர் பெருவாரி நோயால் சீரழிக்கப் பெறுகின்றது; அதன்மீது போட்ட முதலீடு முழுவதும் முழு இழப்பாகின்றது. கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பித் தரவேண்டுமென்று கூப்பாடுபோடுகின்றனர். வீட்டின் மீதும் பண்ணையின்மீதும் உள்ள ஈட்டினை முடித்துக்கொண்டு விடுவதாக அச்சுறுத்துகின்றனர்.

இடர்நிறைந்த இந்நிலையில் வேமனர் பொன்மாற்றுச் சித்தின் மீது ஆசைகாட்டப்பெற்றுக் கவரப்பெறுகின்றார். தாழ்ந்த உலோகங்களைப் பொன்னக மாற்றும் இரகசியத்தை அறிந்திருப்பதாகக் கூறும் மாந்தரைத் தேடி அலைகின்றார், ஏமாற்றுகின்றவர்கள் மாறி மாறி அவரை ஏமாற்றுகின்றனர். இறுதியாக, மானிடன் என்ற பொருளை பொன்னைவிட மிக விலையுயர்ந்த பொருளாக (அஃதாவது நல்ல கருத்து நிறைந்த வாழ்க்கையாக) மாற்றுவதைக் காட்டும் ஞானசிரியர் ஒருவரைக் கண்டறிகின்றார்.

இது வேமனரின் வாழ்க்கையின் விசித்திரமான புத்தாக்கம் என்று படுகின்றதா? வேறுவிதமாகக் கூறினால், பகுத்தறிவுக்குப் பொருந்தி நம்பக்கூடியதாக இருந்தபோதிலும் இதுவும் ஒரு புதிய கட்டுக் கதையாகத் தோன்றுகின்றதா? ஆம் என்று சொல்லலாம்; இல்லை எனவும் கூறலாம். இந்தக் கதையின் ஒவ்வொரு தனிப்பட்ட நிகழ்ச்சியினின்றும் வேமனரின் கவிதையில் ஓர் அடிப்படையைக் காணமுடிகின்றது. அவருடைய பயிர்த்தொழிலின் நெருங்கிய பழக்கம்பற்றியும், அவருடைய உணவுச் சுவைகள் பற்றியும், அவர் அன்பு காட்டும் சில பறவைகள் பிராணிகள் பற்றியும், அவர் வெறுக்கும் பிறவற்றைப்பற்றியும், இசைக்கலையில் அவர் சொக்கியிருக்கும் தன்மைபற்றியும், குறிப்பாகத் தோடி ராகத்தில் அவருக்கு நாட்டம் அதிகம் உண்டு என்பதுபற்றியும், இன்னோ

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/50&oldid=1244260" இலிருந்து மீள்விக்கப்பட்டது