பக்கம்:வேமனர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இன்னும் மிகத் திட்டமாக உள்ளது. இதில் அவர் கண்டிக்கோட்டை என்ற இடத்திற்கருகில் வேமனர் பிறந்தார் என்பதைத் தான் நம்புவதாகச் சொல்லும் அளவுக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளுகின்றனர். மேலும் அவர் வேமனரின் பாடல்களின் சில அகச்சான்றுகளின் அடிப்படையில் வேமனர் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதினார் என்றும், அவர் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதிவரையில் வாழ்ந்தார் என்றும் முடிவுக்கு வரலாம் என்று நிலை நிறுத்துகின்றனர். இங்கு நாம் வேமனரின் காலத்தினைப்பற்றிய தம் உறுதியான கருத்தினைப் பிரௌன் ஓரளவு மாற்றிக்கொண்டார் என்பதைக் காணமுடிகின்றது.

ஆனால், மீண்டும் பிரெளன் தம் கருத்தில் தடுமாறி வேமனரைப் பதினைந்தாம் நூற்றாண்டினைச் சார்ந்தவர் எனக்கொள்ளு கின்றார், "வேமனரின் நீதி, சமய, அங்கதப் பாடல்கள்" என்ற தொகுப்பு நூலின் இரண்டாம் பதிப்பினைக் கி. பி. 1839-இல் வெளியிட்டார். அதன்படிகள் கிடைப்பதற்கரியனவாக உள்ளன: ஆந்திர மாநிலத்தில் தனியார் பொறுப்பிலும் அரசின் பொறுப்பிலுமுள்ள எந்த நூலகத்திலும் ஒருபடிகூடக் கிடைக்கவில்லை. ஆனால் மேஜர் மேக்டனுல்டு என்பவரின் மூலம் அதனைப்பற்றிய சில விவரங்களைச் சேகரிக்க முடிகின்றது. மேக்டனால்டு கூறுகின்றார்: "இந்தப் பதிப்பில் மொழிபெயர்ப்பும் குறிப்புகளும் நீக்கப்பெற்றுள்ளன; ஆனால் சமய, நீதி பற்றிய பகுதிகளில் அதிகமான பாடல்கள் சேர்க்கப்பெற்றுள்ளன. முதல் பதிப்பில் 693 பாடல்களே இருக்க, இரண்டாம் பதிப்பில் 1,163 பாடல்கள் உள்ளன. மேலும் மேக்டனால்டு கூறுவதாவது: "அவருடைய இரண்டாம் பதிப்பில் வேமனரின் பாடல்கள் நான்கு நூற்றாண்டுகட்கு முற்பட்டவை என்ற பொதுவான நம்பிக்கை நிலவுகின்றதாகவும், தெலுங்கிலுள்ள பசவபுராணத்தின் ஆசிரியரும் இவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர் என்று ஜங்கமர்கள் கூறுவது சரியாக இருப்பின், இஃது அவருடைய காலத்தை இன்னும் முன்னுக்குக் கொண்டு செல்லுகின்றதாகவும் பிரௌன் கூறுகின்றார். ஆகவே பிரௌனின் முதல் தற்காலிகக் கோட்பாட்டின்படி வேமனர் ஆங்கில எழுத்தாளராகிய பேக்கன், ஆங்கில நாடக ஆசிரியரான செகப்பிரியர் இவர்களின் கிட்டத்தட்ட ஒரே காலத்தவராகின்றார், அவருடைய இரண்டாம் கோட்பாட்டின்படி மற்றோரு ஆங்கில எழுத்தாளராகிய சாசரின் காலத்தவராகின்றார். இந்த இரண்டு தற்காலிகக் கோட்பாடுகளையும் ஒப்புக்கொள்ளாது, மேக்டனால்டு தான் தனியாக மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில், வேமனர் பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிறந்தவர் என்பதை நிலைநிறுத்துகின்றார்.

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/38&oldid=1243359" இலிருந்து மீள்விக்கப்பட்டது