பக்கம்:வேமனர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர்களைப்பற்றிக்கூறுகின்றது; அவர்களில் 47 பேர் தெலுங்குக் கவிஞர்கள்; இந்த 47 பேர்களிலும் வேமனர் ஒருவராக இல்லை.

வேமனரின் மொழி பண்டைய வழக்குடன் திகழ்ந்தாலும் அவருடைய சொல்வளம் கடினமாக இருந்தாலும், சிந்தனை வழக்கறிந்ததாக இருந்தாலும் அவர் ஏன் மௌனமாகப் புறக்கணிக்கப் பெற்றார் என்பதை நாம் அறியலாம். உண்மை இதற்கு முற்றிலும் மாறுபட்டது. அவருடைய மொழி தூய்மையாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது; அவருடைய சொல்வளமோ தெளிவாகவும் மென்மையாகவும் உள்ளது; புதியனவாகவும் துணிவானவையாகவும் உண்மையுடையனவாகவும் உள்ள அவருடைய ஒப்புமைகள் அடி வானம் முழுவதையும் ஒளியுடையதாகச் செய்யவல்ல மின்வெட்டுக்களைப் போலுள்ளன. உயிர்ப்புடனுள்ள சிலகூறுகளில் அவருடைய சிந்தனை அவருடைய காலத்திற்கு மிக முந்தியதாக இருப்பதோடன்றி நவீன காலத்திற்கும் கூட முந்தியதாக உள்ளது.

உண்மையான பெருங்கவிதைகொண்டு திகழவேண்டிய பிறிதின் சார்பற்ற பல நுண்புலங்களைக் கொண்டுள்ளது அவருடைய கவிதை; ஆகவே அது மேற்கோளாகத் திகழ்வதற்குத் தகுதியுடையதாகின்றது. ஜேம்ஸ் அரசரின் விவிலிய நூலும் செகப்பிரியரும் தத்தமக்கிடையில் ஆயிரக்கணக்கான புதிய தொடர்களையும் மரபு மொழிகளையும் ஆங்கிலப் பேச்சுவழக்கிற்கு வழங்கியுள்ளனர். அங்கனமே தெலுங்குப் பேச்சுமொழியும் வேமனருக்கு மிகவும் கடப்பாடுடையதாகின்றது. வேமனர் அம்மொழிக்குப் புதியதொரு முனையையும், புதியதோர் ஆற்றலையும் கிட்டத்தட்ட புதியதொரு வேகத்தையும் தந்துள்ளார். இப்படியிருக்கத் தெலுங்கு இலக்கியவாணர்கள் தொடர்ந்து பல தலைமுறைகளாக மிகப்பிடிவாதமாக மௌன வெறுப்பைக்காட்ட வேண்டியதன் காரணம் என்ன? இந்த வினா கள்ளமற்ற முறையில் பலர்முன் வைக்கப்பெறுதல் வேண்டும். கள்ளமற்ற முறையிலும் அதற்கு விடைகாணலும் வேண்டும்.

முதலாவதாக, வேமனர் திருமறைகளையும், திருமறைகளில் கூறப்பெற்றுள்ள பலிகலையும், புராணங்களையும் அவற்றின் கட்டுக்கதை வீரர்களையும், தர்ம சாத்திரங்களையும் அவற்றின் சமமற்ற நீதிமுறைகளையும் ஏளனம் செய்கினறார். உண்மையிலேயே தெய்விக அருள் பெற்றதாகவும் தவறு செய்யாத மேலாண்மைக்குரியதாகவும் கூறப்பெறும் எல்லாச் சமயநூல் தொகுதிகளையும் அவமதிக்கின்றார். அவர் முற்றிலும் தெய்வத் திருச்சிலைகளை உடைத்தெறிபவர்; எல்லாவித வடிவங்களிலும் நடைபெறும் உருவ வழிபாட்டை இணங்காத முறையில் எதிர்த்து நிற்பவர்; அதற்கு ஒரு பகுத்தறிவு விளக்கம் கூறுபவர்களிடம் சிறிதும் பொறுமைகாட்

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/14&oldid=1244238" இலிருந்து மீள்விக்கப்பட்டது