பக்கம்:சோழர் வரலாறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

93



வலியை உடையவன்; குற்றமற்ற கேள்வியையுடைய அந்தணர்க்குப் புகலிடமானவன்; இச்சிறப்புகளை உடையவன் என்பதைக் கருதாது கூற்றம் இவனைக் கொண்டு சென்றது; ஆதலால், நாம் அனைவரும் அக்கூற்றத்தை வைவோமாக, வாரீர், புலவீர், நம் அரசன் நற்புகழ்மாலையைச் சூடி நடப்பட்ட கல்லாயினான்.”[1]

என்று கூறிப் புலம்பினார். அவர் தமக்கு மைந்தன் பிறந்த பிறகு, நடுகல்லான அரசனிடம் வந்து, ‘மகன் பிறந்த பின் வா’ என்று என்னை நீக்கிய உறவில்லாதவனே, எனது நட்பை மறவாத நீ யான் கிடத்திற்குரிய இடத்தைக் காட்டு”[2] எனக்கூறி ஒரிடத்தில் வடக்கிருந்து உயிர் விட்டனர்.

சில செய்திகள்: இக்கோப்பெருஞ் சோழன் புலவர் வாய்மொழி கேட்டு நடந்தவன். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் முறையே வளர்த்தவன். இவன் நாட்டுக்களமர் மதுவை ஆமை இறைச்சியுடன் உண்பர்; கொழுவிய ஆரல் மீனாகிய இறைச்சியைக் கதுப்பகத்தே அடக்குவர். வரகரிசி சமைத்து, வேளைப் பூவைத் தயிரில் இட்டுச் செய்து புளிங்கறி உண்ணல் பாண்டிநாட்டு இடைநிலத்தார் வழக்கம் என்று கோப்பெருஞ் சோழன் குறிக்கின்றான். இவ்வுணவைச் சிலர் உண்டனர் போலும்! உறந்தையில் இருந்த அறங்கூறவையம் புகழ் வாய்ந்தது என்பது பொத்தியார் வாக்கால் அறியலாம்.


11. பிற சோழ அரசர்

முன்னுரை: புறநானூற்றுப் பாடல்களில் சோழ மரபினர் பலர் குறிக்கப் பெற்றுளர். அவர்களைப் பற்றி ஒன்று முதல் நான்கு, ஐந்து பாடல்கள் அந்நூலுட் காண்கின்றன. சிலர் பேரரசராகவும் பலர் சிற்றரசராகவும் இருந்திருத்தல் கூடியதே ஆகும். இவர் தம் குறிப்புகள் அனைத்தும் இப்பகுதியிற் காண்க.


  1. புறம், 221.
  2. புறம், 222.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/95&oldid=1232944" இலிருந்து மீள்விக்கப்பட்டது