பக்கம்:சோழர் வரலாறு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

179



5. முதலாம் இராசராசன்
(கி.பி. 985 - 1014)

இராசராசன் பிறந்த நாள்: சுந்தரசோழனாகிய இரண்டாம் பராந்தகனுக்கும் வானவன் மாதேவிக்கும் பிறந்தவன் இராச கேசரி முதலாம் இராசராசன். இவன் கி.பி. 985 சூன் திங்கள் 25-ஆம் நாள் அரசு கட்டில் ஏறினான்,[1] தஞ்சை இராசராசேச்சரத்தில் ‘உடையார் இராசராச தேவர் திருச்சதயத் திருவிழா’ எனவும், திருவையாற்று உலோகமாதேவீச்சரத்தில் ‘உடையார் திங்கள் சதய விழா’ எனவும், செங்கற்பட்டுத் திருவிடந்தை வராகப் பெருமான் கோவிலில், யாண்டுதோறும் ஆவணித் திங்கள் சதயநாள் தொட்டு, ‘இராசராசன் திருவிழா’ என ஏழுநாள் நடந்தது எனவும், வரும் கல்வெட்டுகளை நோக்க, இவன் பிறந்த நாள் சதயநாள் என்பது தெரிகிறது. சேரநாட்டுத் திருநந்திக் கரை என்னும் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்குத் தன் பிறந்த நாளாகிய ஐப்பசி மாதச் சதயநாளில் திருவிழா நடத்தற்காக ‘முட்டம்’ என்னும் ஊரை அளித்தனன் என்பதை அங்குள்ள கல்வெட்டு அறிவித்தலால், இராசராசன் ஐப்பசித் திங்கள் சதயநாளிற் பிறந்தவன் என்பது தெளிவாகிது.இப்பெருமான் பிறப்பைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அழகாகச் சிறப்பித்துள்ளன.

இவனது சிறப்பு:விசயாலயற்குப் பின் வந்த சோழர்களிற் சோழப் பேரரசை நன்கனம் அமைத்து நிலைபெறச் செய்த பேரரசன் இராசராசனே ஆவன். இவன் உண்டாக்கிய பேரரசு ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் நிலையுற்றிருந்தது எனின், இவன் இட்ட அடிப்படை எவ்வளவு உறுதி வாய்ந்ததாக இருந்திருத்தல் வேண்டும்! இராசராசன் தன் தந்தையிடத்தும் பிறகு சிற்றப்பனிடத்தும் இருந்து அரசியல் அமைப்புகளை அழகுற அறிந்திருந்தான்; தான் பட்டம் ஏற்ற பிறகு இன்னின்ன வேலைகளைச்


  1. Ep Ind. Vol. 9. p. 217.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/181&oldid=482841" இலிருந்து மீள்விக்கப்பட்டது