பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

திருவிளையாடற்புராணம்

அன்பு துன்ற நின்றவளைப் பார்த்துச் சிவபரஞ்சோதியாகிய பெருமான் இவ்வாறு கூறினார்.

"என்று நீ திக்கு விசயம் செய்து புறப்பட்டாயோ அன்றே யாமும் மதுரையை விட்டு உன்னைப் பின் தொடர்ந்தோம். இன்று முதல் எட்டாம் நாள் சோமவாரத்தன்று மறைவழி மணம் செய்ய வருதும்; நின்னகர்க்கு நீ ஏகு" என்றார்.

இவ்வாறு கூறிய நாதன்மேல் அன்பையும் உயிரையும் இருத்தி ஆயத்தார் சூழத் தேர் மேல் ஏறிக்கொண்டு தெய்வ மால்வரைகளையும், புண்ணிய நதிகளையும் கடந்து மாமதுரையை அடைந்தாள்.

மங்கையர்க்கரசியாகிய தடாதகைப் பிராட்டியை மங்கலப் பொருள்களோடு நங்கையர் எதிர் கொள்ளச் செல்வம் மிக்க மாளிகையில் புகுந்தாள். உடனே திருமணச் செய்தியைத் திட்டி எங்கும் ஓலைகளைப் போக்கி அமைச்சர்கள் மங்கல வினைக்கு வேண்டுவனவற்றை அமைக்கத் தொடங்கினர். மாநகர் எங்கும் முரசு அறைவித்துச் செய்தி செப்பினர்.

சிவபெருமானும் குறித்த நாளில் மதுரை வந்து சேர்ந்தார். அவர் இடப வாகனத்தினின்று இறங்கினார். திருமாலும், பிரமனும் இருபுறத்திலும் நின்று வரவேற்றனர். அப்பொழுது காஞ்சனமாலை மகளிர் சூழ வந்து பொற்கலம் கொண்டு அவர் திருவடிகளைக் கங்கை நீர் கொண்டு விளக்கி ஈரம் புலரும்படி வெண்பட்டினால் துடைத்துப் பனிநீர் தெளித்து சந்தனக் குழம்பை அணிந்து கற்பக மலர்கள் சார்த்திக்