பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

திருவிளையாடற்புராணம்

என்னும் உயரிய நோக்கில் அம்மலரைத் தம் பரிசாக அவனிடம் தந்தார்; சிவன் சிரத்தில் இருந்த மலரை அவன் கரத்தில் தந்த போது அவன் அதனை மதித்து வாங்கவில்லை; ஒரு கையாலேயே வாங்கி அதனை யானையின் மத்தகத்தின் மீது வைத்தான்.

செருக்குற்ற அந்த யானையும் பெருங்குற்றம் ஒன்று செய்தது; அதனைத் தன் துதிக்கையால் எடுத்துத் தன் காலில் வைத்து மிதிக்கத் தொடங்கியது; கசங்கிய அந்த மலர் அம்முனிவன் கண்களில் நெருப்புப் பொறியைக் கக்க வைத்தது. உருத்திரம் கொண்டு எழுந்த முக்கண் கடவுள் போலக் காத்திரம் கொண்டு தன் நேத்திரத்தைத் திறந்து பார்த்தார். அதில் கோபக் கனல் பொறிப்பட்டது. சாபம் உடனே அவர் வாயில் வெளிப்பட்டது.

"தலைக்கணம் மிக்க உன் தலையைப் பாண்டியன் ஒருவன் நிலைகுலையச் செய்வான் என்றும், மதிக்காமல் பூவை மிதித்த உன் மதயானை காட்டு யானையாக நூறு ஆண்டுகள் பூமியில் உழல்வதாக என்றும் சாபம் இட்டார். தலைவனை இழந்து நிலை கெட விரும்பாத தேவர்கள் முனிவனிடம் முறையிட்டு அவன் உயிரைப் போக்க வேண்டாம் என்று இரந்து கேட்டுக் கொண்டனர். தலைக்கு வந்தது அவன் தலை மணி முடியோடு போகட்டும் என்று திருத்தி அருள் செய்தார். வெள்ளை யானை கருப்பு யானையாக மாறியது. வேளைக்கு உணவும் நாளைக்கு ஒரு பவனியும் வந்த யானை காட்டு நிலங்களிலும் மேட்டு நிலங்களிலும் மழை வெய்யில் என்று பாராது வெறி கொண்டு திரிந்து உழன்றது. மண்ணுலகில் நூறு ஆண்டுகள் தன் நினைவு அற்று உழன்று திரிந்தது. பின்னர் ஆலவாயில் கடம்ப வனம் சென்ற போது கடந்த கால நினைவு தோன்றியது