பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

திருவிளையாடற்புராணம்

முடி சூடிக் செங்கோல் ஒச்சும் சீர்மையை மேற்கொண்டார்.

விடைக் கொடி கயல் கொடியாகியது; அரவுக் கலன் பொற்கலன் ஆகியது; கொன்றைப்பூ வேப்பம் பூவாக மாறியது; புலித்தோல் பொன்னாடையாக மாறியது; மதி முடி மணி முடி ஆகியது; மதுரைப் பதியில் உறையும் சோமசுந்தரக் கடவுள் பாண்டியனாகி வீற்றிருந்து செங்கோல் நடத்தினார்.

சிவன் கொண்ட புதிய வடிவுக் கேற்பச் சங்குகன்னன் முதலிய கணத்தவர் தாமும் பண்டை வடிவம் மாறிப் பார்த்திபனின் பணியில் நின்றனர். தென்னவன் வடிவம் கொண்ட சிவபிரான் உலகம் காக்கும் மன்னர்கள் சிவனைப் பூசை செய்வது வேத நெறி என்று உணரும் பொருட்டுத் தானும் அந்நகரில் நடுவூர் என்று ஓர் அழகிய நகரைப் புதுப்பித்தார். சிவாகம வழியே கோயிலும் விதித்து சிவலிங்கத்தையும் பிரதிட்டை செய்து நாளும் விதி முறைப்படி பூஜைகள் செம்மையாகச் செய்தார். பின் தன் கடமைகளைச் செய்து வந்தார். அச்சிவலிங்கத்தையும் சோமசுந்தரக்கடவுளையும் வழிபட்டு மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கி நல்லாட்சி செய்தார்.

6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

கொடி போன்ற தடாதகையை மணந்த பின் புவனம் தாங்கும் கண்ணுதல் மூர்த்தியின் திருமணத்திற்கு வந்த மண்ணியல் வேந்தர், வானோர், மாதவர் மற்றும் பிறரையும் "உண்ண வாருங்கள்" என்று அழைத்தனர்.