பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

முல்லைப்பாட்டும் இவ்வகையில் இதனொடு ஒத்து விளங்குகிறது. அது முல்லை வருணனைச் சிறப்பால் முல்லைப்பாட்டு எனப்பட்டது இது வாடைக் காற்றின் வருணனையால் நெடுநல்வாடை எனப்பட்டது

"நள்ளென் காமத்துப் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே”

- (186-88)

இவை வேந்தனின் கடமை உணர்வைக் காட்டும் தொடர்கள்.

8. மதுரைக் காஞ்சி

இது 782 அடிகளைக் கொண்டது; வஞ்சியடிகள் விரலிய ஆசிரியப்பாவால் அமைந்தது. மதுரை என்னும் நகரின் பெயரும், காஞ்சி என்னும் திணைப் பெயரும் இணைந்து மதுரைக் காஞ்சி எனப் பாட்டின் தலைப்பாக அமைந்துள்ளது.

மதுரைக் காஞ்சி - மதுரையிடத்து வேந்தனுக்குக் கூறிய காஞ்சி என விரியும். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைக் கூறி அறிவுரை கூறும் பாட்டு, அது. இதனைப் பாடியவர் மாங்குடி மருதனார்.

"திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர் தலை உலகம் மாண்டு கழிந்தோரே”

என்பது நிலையாமையை விளக்கும் தொடராகும். மதுரைக்கண் பாயும் வையை யாற்றின் சிறப்பு, அந்நகரின் நாளங்காடி அல்லங்காடி முதலியன இதில் புனைந்துரைக்கப்பட்டுள்ளன.